ஜேர்மனியில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம்: கலவரத்தில் பொலிஸை தாக்கியதால் தடியடி
ஜேர்மனியில் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கை எதிர்த்து 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
அப்போது Kassel நகரத்தில் போராட்டக்காரர்கள் ஜேர்மன் பாதுகாப்புப் படை உறுப்பினர்களைத் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆர்பாட்டக்கார்களின் பல்வேறு குழுக்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டதாகவும், தொற்று அதிகரிக்கும் இந்த நேரத்தில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்றும் "இது அமைதியான போராட்டங்கள் போல இல்லை" என்றும் உள்ளூர் பொலிஸார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையை உடைக்க முயன்று பொலிஸை தாக்கியுள்ளனர். அப்போது, பேரணிக்கு அனுமதி பெற்ற பகுதிக்கு வெளியே வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தண்ணீர் பீரங்கியைப் பயன்படுத்தியுள்ளனர்.
பின்னர் போராட்டக்காரர்களுடன் சண்டையில் கைகலப்பு ஏற்பட்டதால், தடியடிகளைப் பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொற்றுநோயின் மூன்றாவது அலையின் பிடியில் ஜேர்மனி சிக்கியுள்ளது. சனிக்கிழமை மட்டும் 16,000-க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது.
அந்நாட்டில் இதுவரை 2,658,851 நோய்த்தொற்றுகள் மற்றும் 74,657 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் அரசாங்கத்திற்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.





