திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களது 'பொன்வண்டு' நூல் வெளியீடு!
தமிழ் இலக்கியம் பல்லாயிரம் ஆண்டுகள் வளமும் தொடர்ச்சியும் கொண்டிருப்பினும், ஈழத்தில் தமிழ் இலக்கியம் கற்போருக்கு உள்ளத்தில் இன்பம் அளிக்கும் நூலாக மட்டுமல்லாது இனவிடுதலை உணர்வுகளையும் அளித்திருந்தது. அதுபோல் ஈழத்தின் போர்க்காலத்தில் அறிவை வளர்க்கும் தமிழ்
இலக்கியப் படைப்புக்களும் தமிழர் நிலத்திலிருந்து வெளிவந்தது சிறப்பாகும்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறுகதை, நாவல், நாடகம் என எழுத்துக்கலை வடிவங்களை தம் வளத்திற்கேற்ப வெளியிட்டு புலம்பெயர் தமிழ்ப்படைப்பாளிகள் உலகினையும் படைத்துள்ளார்கள்.
தாயகப் படைப்பாளியாகவும் தற்போது புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வரும் புலம்பெயர் படைப்பாளியாகவும் இரு உலகினையும் நன்கறிந்த சிறந்த தமிழ்ப்படைப்பாளியாக திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் விளங்குகின்றார்.
எங்கள் வாழ்வை, எங்கள் பண்பாட்டை, எங்களின் உணர்வுகளை எதிர்காலத் தலைமுறைக்கு கடத்திச் செல்ல வேண்டும் என்கின்ற என் மனநிலையில் நின்றே நான் எழுதுகின்றேன். எங்களுக்கு உரித்தான நிலம் இருக்கிறது, அழகியல் நிறைந்த வாழ்விருக்கிறது. எமக்கே எமக்கென்ற சிறப்பான அடையாளங்கள் இருக்கின்றன.
அவற்றை தொலைத்துவிட்டு, நாம் யார் எனத்தெரியாமல் எமது எதிர்காலத் தலைமுiயினர் அழிந்துவிடக்கூடாது என்கிற மன உந்துதல்தான் என்னை இயக்குகின்றது என இவர் தனது பொன்வண்டு நிறை அட்டைப்படத்தில் குறித்துள்ளார்.
வெறும் கற்பனை வளம் மட்டுமன்றி, கலையழகும், நற்றிமிழ் சொல்லாட்சியும் சேர்த்து, மனித உறவுகளின் உணர்வினை வெளிப்படுத்தும் இயல்பும் கொண்டு நற்படைப்பாக இவரது படைப்பு அமைந்துள்ளது.
216 பக்கங்கள்கொண்ட இந்நூலை ஜீவநதி கலைஅகம், அல்வாய் ஈழத்தில் வெளியிட, சுவிற்சர்லாந்தில் தமிழர் களறி மண்டபத்தில் இந்நூல் 14.08.22 ஞாயிறு வெளியீடு கண்டது.
உரை-, சிறப்புரை, நிகழ்வு
அகவணக்கத்துடன் நிகழ்வு 16.00 மணிக்கு தொடங்கப்பெற்றது. அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்திபன், ஊடகவியலாளர் திருமதி. சோபியா பாஸ்கரன், நூலாசிரியர் திருமதி. ஆதிலட்சுமி, திரு. சிவகுமார் ஆகியோர் மங்கலவிளக்கினை ஏற்றிவைத்தனர்.
தமிழர் களறி சார்பாளராக திருமதி. கார்த்திகா முரளிதரன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார். சிறந்த தமிழ்ப் படைப்பாளியின் நூல்வெளயீட்டில் பங்கெடுக்க வருகை அளித்திருக்கும் அனைவரையும், பேராளர்களையும் தமிழர் களறியின் பெயரால் வரவேற்றார்.
சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் வாழ்த்துரை மற்றும் நல்லாசியுரையினை வழங்கினார்.
தமிழர் களறி எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் நிறுவப்பட்டதன் நோக்கம் தமிழர் தொன்மை, பரவல், வரலாறு என்பன தக்க சான்றுகளுடன் காக்கப்படவேண்டும்.
எமது இளந்தமிழ்ச் செல்வங்களுக்கு கல்வி முறையில் இது வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இவ்வகையில் தமிழர் களறி ஆவணக்காப்பகத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் எமது நோக்கினை நிறைவுசெய்து வருகின்றன.
தோற்றத்தில் மிக அமைதியான திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களிடம் இலக்கிய எழுத்துப்படைப்பில் செறிந்த நற்றமிழ் அறிவும், சொல்லாட்சியும் புதைந்துள்ளது.
ஈழமணித்திருநாட்டில் தமிழர் அரசு இயங்கிய காலத்தில் பல்பொறுப்பு மிக்க பணிகளை மேலாண்மை செலுத்திய ஒரு தகையாளர் இவர் என்பது உருவத்தில் தெரியாது. எமது தேசத்தலைமகன் வழியில் நெறிபிசகாது போர் மௌனிக்கப்பட்ட காலம்வரை தன் கடமையினை நிறைவாக ஆற்றிய உன்னத படைப்பாளி இவர் ஆவார்.
இவர் தொடர்ந்தும் தனது பட்டறிவினை எம் தமிழர் கைகளில் படைப்புக்களாக படைத்தளிக்க வேண்டும் என வாழ்த்தி நல்லாசிகள் வழங்கித் தனதுரை அளித்தார்.
நூல் அறிமுகஉரையினை திருமதி. பிரேமினி அற்புதராசா, சுவிஸ், சியோன் தமிழ்ப்பள்ளி ஆசிரியை ஆற்றிவைத்தார். திருமதி. ஆதிலட்சுமி அவர்களின் வாழ்க்கையினையும் அவரது படைப்பினை எடுத்து விளக்கி நூலினை அறிமுகம் செய்துவைத்தார்.
நினைப்பதை எழுதுவது இலகுவானது அல்ல, சமூக அக்கறையுடன் காலப்பதிவாக சிறந்த திறனுடன் சிறுகதை நூலை ஆதிலட்சுமி அக்கா படைத்திருக்கிறார் என சான்று பகர்ந்தார்.
தமிழ்வணக்க நடனம் செல்வி. அஸ்மிகா ரஜனிகாந்த் அளித்தார். குறுகியநாட்களுக்குள் பயின்று பாவ, இராக, தாளத்துடன் தேனிசையின் குரல் ஒலித்த பாடலிற்கு சிறந்த நடனக்கலையினை மேடையில் வழங்கினார். திருமதி. ஆதிலட்சுமி மாணவிக்கு பொன்னாடை அளித்து மதிப்பளித்தார்.
தமிழர்களறியின் சார்பில் திரு. சிவகீர்த்தி தில்லையம்பலம் அவர்கள் நூல் வெளியீட்டுரை ஆற்றினார். நூலின் தன்மையினை விளக்கியவர், எழுத்தில் பல் வகை இருக்கும். இவர் இனம், மொழி, தாயகம் மீது அன்புகொண்டு உள்ளதை உள்ளபடி வரலாற்றுப் பதிவாக இச்சிறுகதைத் தொகுப்பு அமைந்துள்ளது.
இறப்புக்கள் நடுவில் போர் நடந்த காலத்திலும் ஈழத்தில் அழகியல் வாழ்விருப்பதையும் கதையில் காட்டியுள்ளார். ஈழத்தில் புலம்பெயர் வாழ்வில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் வாழ்வியல் முறையினையும் இயல்புடன் எழுத்தில் படைத்துள்ளார்கள்.
இவர்போன்ற படைப்பாளிகள் ஓயாது ஓடிக்கொண்டு வரலாற்றை பதிவுசெய்ய முயல்கின்றார்கள். இவர்களுக்கு தமிழர் களறி தொடர்ந்து நல்லாதரவினை அளிக்கும். எமது வரலாற்றினை எந்த வடிவத்தில் எவர் படைக்க முனையும்போதும் நாம் உடனிருப்போம். திருமதி. ஆதிலட்சுமி அவர்களுக்கும் தமிழர் களறிக்கும் இருப்பது கொள்கைரீதியான இணக்கம்.
இவரது படைப்பு எமது வாழ்வியலை இளந்தமிழ்ச்செல்வங்கள் அறியும் ஒருவகை வரலாற்றுப் பதிவுமாகும். தொடர்ந்து இவர் எழுத வேண்டும் எனும் வேண்டுகையுடன் நாம் பொன்வண்டு சிறுகதை நூலை வெளியிட்டு நிறைகின்றோம் என வெளியீட்டுரை அமைந்தது.
வெளியீடு
முதற்படியினை திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் வெளியிட தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்திபன் பெற்றுக்கொண்டார். நூலைப்பெற்றுக்கொண்டு திரு. பார்த்திபன் சிறப்புரை ஆற்றினார். ஒரு மனிதன் என்ன செய்தான் என்பதைவிடவும் இப்போது என்ன செய்துகொண்டிருக்கின்றான் என்பது மிக முக்கியம்.
இவர் தாயகத்தில் மட்டும் படைப்பாளியாக இருக்கவில்லை, 2009 முள்வேலிக்கு வெளியில் புலம்பெயர்ந்த பின்னரும் தனது படைப்புப்பணியினைத் தொடர்கிறார். இவரது படைப்பினை எமது தேசம் அறியும்.
அன்று தமிழர்கள் தமது வெளியீடுகளை பனையோலையில் எழுத்தாணி கொண்டே எழுதி வைத்தனர், இன்று அச்சேறி அந்நூல்கள் இன்றும் எமது வரலாற்றைப் பேசுகின்றது.
அதுபோல் இவரது படைப்பும் எமது வலாற்றினை பதிக்கின்றது, இவர்போன்ற படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தமிழர்களறியினையும் பராட்டி நிறைந்தார் திரு. பார்த்திபன்.
யேர்மன் நாட்டில் பிறங்போர்ட் நகரில் இருந்து கவிஞர், இணையவானொலி அறிவிப்பாளர், திருமதி சோபியா பாஸ்கரன் சிறப்பு படியினைப் பெற்றுக்கொண்டு, சிற்றுரை ஆற்றினார். மகுடநுண்ணித் தொற்றுக்காலத்தில் திருமதி. ஆதிலட்சுமியின் படைப்புக்களை நுகரத்தொடங்கியதையும், இவரது படைப்பு ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் நடுவில் எச்சிறப்புக்குரியவை என்பதை எடுத்துவிளக்கிப்பேசினார்.
லுட்சேர்ன் ஆசிரியர் பல்கலைக்கழக மாணவி செல்வி. நிதுர்சனா ரவீந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
ஐக்கியராச்சியத்தில் இருந்து திருமதி. கௌரி பரா அவர்கள் காணொளி வடிவில் சிறப்புரை ஆற்றப்பட்டது.
தாயத்தில் வெளியாகிவந்த ஈழநாதம் வார இதழின் ஆசிரியர் திரு. இந்திரகுமார் சிறிதரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தாயத்தில் வாழ்ந்த நாளை கண்முன்கொண்டு வந்து, பெரும்போர் காலத்திலும் உயிருக்கு காப்பு அற்ற நிலையிலும் புலிகளின் குரல் வானொலி, நிதர்சனம் இவ்விரண்டு ஊடகங்கள் களத்தில் இறுதியுத்த மௌனிப்பு நாள்வரை இயங்கிச்சென்ற காட்சியை தன் உரையில் வருகை அளித்த மக்கள் உள்ளத்திரையில் காட்சியாக ஒளிரப்புச்செய்தார்.
ஒரு படைப்பாளி படைப்பினை படைத்து நூலாக்கும்வரை உள்ள கடினங்களை விளக்கினார். எழுத்துப்பிழை அச்சுப்பிழை படைப்பில் நீக்க பதிப்பாளர்கள் பொதுவாகப் எதிர்நோக்கும் கடினங்கள் துறைசார் அறிவுடன் விளக்கினார்.
எல்லோரும் உலகத்தில் ஒருவித வாழ்க்கையினை வாழ்கின்றோம், அதில் எல்லோரும் ஒருவிதமான வாழ்க்கையினை வாழ்வதில்லை, மனிதர்களுக்கு மனிதர்கள் மாறுபட்டும் வேறுபட்டும், வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். அதில் சிலருக்குமட்டும்தான் அசாத்தியமான அனுபவங்கள் வாழ்வில் கிடைப்பதுண்டு. இத்தகைய அனுபவங்கள் நிறையவே ஆதியக்காவிடம் உண்டு. ஆகவே ஆதியக்கா நிறையவே எழுதலாம், எழுதவேண்டும்“ எனச் சிறப்புரை பகன்றார்.
நூலாசிரியர் உரை
நூலாசிரியர் இவ்வாறு தனது உரையினை ஆற்றினார்:
எங்களுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்துள்ள அனைவருக்கும் எனது அன்பையும் வணக்கத்தினையும் முதலில் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தமிழர் களறியின் ஓர் துணையும், உற்றார்களாகிய உங்கள் தன்னலமற்ற ஈடுபாடும் இன்று இந்த விழாவை சிறப்பிக்க வைத்துள்ளது என நான் நினைக்கின்றேன். ஒரு படைப்பாளியாக என் மனதை வந்தடையும் மூலங்களை அதன் தன்மைகளுக்கு ஏற்ப, படைப்புக்களாக மட்டுமே எனக்குத் தெரிந்திருக்கின்றது. இப்படிப் படைப்பவற்றை வாசிப்பாளர்களிடம் அல்லது ஈடுபாடுள்ளவர்களிடம் எடுத்துச் செல்வதென்பது, என்னைப் பொறுத்தவரைக்கும் மிக்க கடினமாகவே இருக்கின்றது.
இந்த நூலை வெளியிடுவதற்கான சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவற்றை ஒப்பேற்றுவதற்குள் என் மனது களைத்துப்போய்விடுகிறது. இன்றைய சூழலில் ஒரு சமூகநோக்குக்கொண்ட படைப்பாளி என்ற வகையில் பல அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
ஒரு நூலை இலக்கியப்பரப்பிற்குள் கொண்டு செல்வதில் பெரும் வலிகளை நான் உணர்கின்றேன். சிரித்துக்கொண்டும் உட்காயங்களைத் தடவிக்கொண்டும் இந்தப் படைப்புலகில் பயணிக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம். ஆனாலும் எமக்கு வாழ்ந்துகாட்டிய வாழந்துகொண்டிருக்கின்ற முன்னோடிகளைப்போல எங்களுடைய எதிர்கால தலைமுறையினருக்கு எதையாவது தேட்டமாக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதனால் என் எழுத்துக்களும் தொடருமென நான் நினைக்கின்றேன்.
எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் ஓர் தேரை ஓட்டுவதற்கு சமமானதுதான். ஏனென்றால் எழுவதற்கான கருவிகள் அல்லது மூலங்கள் உள்ளத்திற்குள் உள்ளே வந்துவிட்டால் எழுதி முடிக்கும்வரை உள்ளே இருந்து உறுண்டு உறுண்டு ஊன் உறக்கம் வரவிடாது. அதை எழுதி முடித்தால்தான் அந்தப்பேய் என்னைவிட்டுக் களன்றுபோகும் எனும் நிலையை நான் பலமுறை உணர்ந்திருக்கின்றேன். இப்படியாக உருவாக்கும் படைப்புக்களை படைப்பாளிகள்தான் நூலுருவாக்கம் செய்ய வேண்டியிருக்கின்றது. எல்லோருக்கும் இது இயலக்கூடியதல்ல.
தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை ஒன்றுதிரட்டவும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட தமிழர்களறி என்கின்ற இந்த அமைப்பு எனது படைப்புக்களுக்கு தந்த தருகின்ற வரவேற்பும் ஈடுபாடும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துகொண்டிருக்கின்றது. இதேபோல் சமூக பயனுள்ள படைப்புக்களை நூலுருவாக்குவதற்கு «அனுசரணையாளர்கள்» அதாவது «செலவுதாங்கிகள்» எனப்படும் ஸ்பொன்சர்கள் முன்வரவேண்டும் என நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் வதிகின்ற சுக்மாநிலத்தின் நகரநூலகம் தனது படைப்பாளர் வரிசையில் என்னையும் இணைத்து எனது நூலையும் காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் எனது நூல், தமிழ்மொழியில் எனது தாய்மொழியில், இருப்பதால் இந்நாட்டவரை சென்றடையவில்லை என்ற கவலையும் எனக்கு இருக்கின்றது. நன்றியுரை தனியாக இருப்பதால் நான் பெரிதாக நீட்டி முழக்கவில்லை.
இந்த நூலை நான் அச்சிடவேண்டும், இதை ஒரு ஆவணமாக்க வேண்டும் என்று எண்ணித் தொடர்புகொண்டபோது, எனது நாட்டில் அது ஒரு தொழிலாளிக்கு உழைப்பாகும் என்ற எண்ணத்தோடு நான் அங்கே அணுகியபோது, அந்த ஜீவநதி பதிப்பகத்தின் ஆசிரியர், உரிமையாளர் தம்பி பரணீதரன் அவர்கள் அக்கா ஒன்றும் யோசிக்க வேண்டாம், நான் செய்துதருகின்றேன் என்று சொல்லி அந்த நூலைப் பொறுப்பெடுத்திருந்தார்.
இன்று யேர்மன் நாட்டில் பிறங்போர்ட் நகரிலிருந்து என்னுடைய முகம்தெரியாமல், வெறுமனே முகநூலில் மட்டும் எழுதி எழுதி உரையாடி புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டிருக்கின்ற திருமதி சோபியா பாஸ்கரன் அவர்களுக்கும் மற்றும் உடல்நலக்குறைவு வருத்தியபோதும் ஏற்றுக்கொண்டதை செய்துமுடிக்கவேண்டும் என்கின்ற ஒரு உந்துதலோடு ஓர்மத்தோடு இலண்டனிலிருந்து மனமுவந்து உரைமை செய்துதந்த திருமதி கௌரி பரா அவர்களுக்கும், ஓர் இக்கட்டான காலநிலையில் நான் சிறுசெய்தி அனுப்பியபோது தமி;ழ் வணக்கப்படாலிற்கு ஆடல் ஒழுங்கு செய்துதந்த தமிழ் ஆசிரியை திருமதி பாலேஸ்வரி அவர்களுக்கும், ஆடலை நிகழ்த்திய செல்வி அஸ்மிகா அவர்களுக்கும், தொலைவில் இருந்து திரண்டுவந்த அனைவருக்கும், நன்றிகள் என நன்றி பகன்றார் திருமதி ஆதிலட்சுமி.
நன்றியுரை
நன்றி உரையினை திருமதி கார்த்திகா முரளிதரன் அவர்கள், ஆதிலட்சுமி அக்கா தனது உரையில் பலருக்கும் நன்றிநவின்று தனது பேச்சை இலகுhவக்கியதாக குறிப்பிட்டார்.
தமிழர்களிறியின் சார்பாளராக இந்நூல் வெளியீட்டில் பங்கெடுத்த, பங்களித்த அனைவர் பெயரையும் மீண்டும் ஒருமுறை நிரலிட்டு நன்றியுரை ஆற்றினார்.
ஈழமணித்திருநாட்டின் செம்மையான படைப்பாளியின் நூல் வெளியீட்டில் பல நூறு தமிழ் வாசிப்பாளர்கள், உணர்வாளர்கள் பங்கெடுத்தனர். வருகை அளித்தோர் உள்ளத்தில் மிகுநிறைவுகொடுத்து நிகழ்வு 16.00 மணிக்கு தொடங்கப்பெற்று 18.50 மணிக்கு நிறைந்தது.
தொகுப்பு: சிவமகிழி