சுவிஸில் தமிழ் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் எழுதிய நூல்களின் வெளியீடு
சுவிஸில் தமிழ் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் எழுதிய நூல்களின் வெளியீடு சிறப்புற நடைபெற்றது.
தமிழர்கள் சுவிஸுக்கு வந்து வாழ ஆரம்பித்து சுமார் 41 ஆண்டுகள் என்கிறது புள்ளிவிபரம்.
எழுந்தாளர் விக்கி நவரட்ணம் அவர்கள் 39 ஆண்டுகளாகச் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார்.
அவர் வாழும் Wallis மாநிலம் புகழ்வாய்ந்த அல்ப் மலைகளால் நிறைந்தது,Zermatt,matterhorn என்பன இத்தாலியை எல்லையாகக் கொண்டுள்ள சுவிஸ் மலைகளாகும்.
இந்த மாநிலத்துக்கு 1984 ம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முதலாக வருகை தந்த முதல் தமிழ்மகன் விக்கி நவரட்ணம் அவர்கள்தான் என்கிறது பதிவுகள்.
மூன்று பெண்பிள்ளைகளின் தந்தையான விக்கி நவரட்ணம் 74 வயது நிரம்பிய புகழ்பூத்த எழுத்தாளர்.
தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு, அன்பு மனைவியுடன் மகிழ்சியாக வாழ்ந்துவரும் இவர் , படைத்த சிறுகதைகளும், கவிதைகளும் புலம்பெயர்தலைக்காதலைக், களத்துக்கும், புலத்துக்குமான இடைவெளியை, நல்லுறவுகளைப் பற்றியெல்லாம் நிறையப் பேசுகிறது.
கடந்த நாற்பதாண்டுகால வாழ்வின் வலிகளும்,சுமைகளும்,கண்ணீரும்,துயரங்களும்,ஏன் சில மகிழ்ச்சிகளும் விக்கி நவரட்ணத்தின் படைப்புகளாகின்றன.
வீரகேசரி,காற்றுவெளி,இனிய நந்தவனம் போன்ற பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பெறும் சிறுகதைகள், “வாசல் வந்த கங்கை “எனும் நூலாகவும்,கவிதைகள் “மனதுக்குள் உறங்கும் மெளனம் “எனும் நூலாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை Wallis மாநிலத்தில் Sion நகரில் வெளியிடப்பட்டது.
விக்கி நவரட்ணம் ஏற்கனவே “ஆகாய கங்கை” “கண்களில் ஏன் அந்த கங்கை” எனும் இரண்டு நூல்களுடன் மொத்தம் நான்கு நூல்களைச் சுவிற்சர்லாந்திலிருந்து படைத்துத் தமிழுக்குத் தந்துள்ளார்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் சுவிஸின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
சுவிற்சர்லாந்தில் முதன் முதலாக சிறுகதை நூலை வெளியிட்ட எழுந்தாளர் முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா(கலாநிதி கல்லாறு சதீஷ்) தலைமையில் நடைபெற்ற இந்த நூல்வெளியீட்டு விழாவில்,தமிழ் ஆசான் பூநகரியான் முருகவேள் பொன்னம்பலம்,ஒலிம்பிக் நகரான லவுசான் மாநகராட்சியின் உறுப்பினர் தம்பிப்பிள்ளை நமசிவாயம்,பட்டிமன்றப்பேச்சாளர் வித்தகன் சுரேஷ் செல்வரட்ணம்,எழுத்தாளர் சண் தவராசா,சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்,எழுத்தாளர் பிறேமினி,எழுத்தாளர் ஜெயந்தி ஜீவா,தமிழ்க்குரு பாலகுமார் இரத்தினசபாபதி ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.
திரு.ரஜனிகாந்த் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். கலாநிதி கல்லாறு சதீஷ் தனது தலைமையுரையில்; “வைகாசிமாதம் என்பது வலிமிகுந்த மாதம்,தமிழ் நூல்களை அதிகம் வெளியிடுவதற்கு மிகவும் உகந்த மாதம் இந்த மாதம்தான்,ஏனென்றால்,அன்று இழந்து போன அந்தத் தூண்களுக்கு நிராக நிற்கப்போவது இனி இந்த நூல்கள்தான்.
சங்க கால நூல்களும்,சங்கம் மருவிய கால நூல்களும்,காலக்கண்ணாடியாக இருப்பதுபோல் நவீன புலம்பெயர்தேசத்தின் காலக் கண்ணாடியாக இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தபோதும் விக்கி நவரட்ணம் அவர்களின் ஒரு வாசல் வந்த கங்கையும் இருக்கலாம். மேலும் அவர் தனதுரையில்; இன்று அன்னையர் தினம்,மாதம் வலி சுமந்த வைகாசி இரண்டு நினைவுகளாகவும்,இரண்டு நூல்களைப் படைத்துள்ளார்,கவிதை நூலைத் தனது தாய்க்கு அர்ப்பணம் செய்தவர்,சிறுகதைகளுக்கு வைத்த தலைப்புகளே கவிதைகளாக இருக்கின்றன,அவர்தம் சிறுகதைகளின் தலைப்புகளை எடுத்து அவருடைய தாயாருக்கு நானொரு கவிதை படைத்துள்ளேன் என்றவர் பின்வரும் தலைப்புகளால் உருவான கவிதையினை வாசித்தார்.
“அம்மாவின் ஞாபக வெளிகளில்-ஒரு
இளநதி நகர்கிறது.
இறக்கை இழந்த ஈசல் போல்
என்மனம் பறக்கிறது.
தூரத்திலிருந்தாலும்-தாயே
நெஞ்சோரத்தில் உன்நினைவு.
நினைவுகள் உருகிவரும் நெஞ்சிற்குள்
உதிரக்கண்ணீர்.
மெளனத்தில் புதைந்த கவிதைகளாக
மனதிற்குள் உறங்கும் உன் நினைவுகள்.
இந்த சோகங்களின் நதிமூலம் எது?
காத்திருந்த வைகறைக்குக்
கண்கொடுத்த பெரும் மேகமா?-
அல்லது திசை தவறிச் சென்ற இந்தச் சிறுமேகமா?
வாழ்வதற்கு வானமில்லாத வானவில்-நான்
நீயோ-மேகங்களுக்கிடையில் தூங்கும் நட்சத்திரம்.
நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.
பாசத்தின் ஊற்றுக் கண் திறந்தது.
தூதுவிட்ட மனம் மழையில் நனைந்தது
இருள் விலகிய இதயங்களில் கண்ணீர்
கவலை என் கண்களில் கண்ணீரைத்
தெளித்தது
தாயே அதுவே இங்கே
என் வாசல் வந்த கங்கை."
என்று கவிதையை முடித்தார். நூல்வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் 1750.- சுவிஸ் பிராங்குகளை அறக்கொடையாக வழங்கினார்.
சுமார் ஆறு இலட்சம் இலங்கை ரூபாய்கள் பல்வேறு வழிகளில் தாயக உறவுகளுக்கு உதவும் விதத்தில் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.