பஞ்சாபில் கால்வாயில் கவிழ்ந்த பேருந்து: 8 உயிரிழப்பு, 18 பேர் காயம்
பஞ்சாபில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கால்வாயில் கவிழ்ந்த பேருந்து
பஞ்சாபின் சர்துல்கரில் இருந்து பதிண்டா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஜிவான் சிங் வாலா என்ற கிராமத்தில் பாலத்தில் இருந்து கீழே விழுந்து கால்வாயில் மூழ்கிய சோக சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சோக சம்பவத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பதிண்டா காவல்துறை எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ள தகவலில், "சர்துல்கரில் இருந்து பதிண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, மாநகர துணை ஆணையர் தலைமையில் பொலிஸார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தனர். உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
அத்துடன் தேசிய பேரிடர் மீட்புப் படையும் வரவழைக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளது.
கிராம மக்களின் உடனடி உதவி
விபத்து நடந்த உடனேயே, கிராம மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு பெரும்பாலானோரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
விபத்து நடந்தபோது மழை பெய்து கொண்டிருந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |