வெறும் 7 ரூபாய்க்கு லொட்டரி வாங்கி ரூ.1 கோடி வென்ற கூலி தொழிலாளியின் மனைவி
punjab women buys 7rs lottery won 1crore: இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி வெறும் 7 ரூபாய்க்கு லொட்டரி வாங்கி ரூ.1 கோடி பரிசு வென்றுள்ளார்.
7 ரூபாய்க்கு வாங்கிய லொட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு
பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் கோட்கபுராவில் வசித்து வருபவர் பிம்லா தேவி.

இவரின் கணவர் கம்பி தொழிலில், தினக்கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து, தனது வருமானத்தின் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
மாலையில் குழந்தைகளுக்கு உடை வாங்குவதற்காக ரயில்வே சாலைக்குச் சென்ற பிம்லா தேவி, சிக்கிம் அரசு லொட்டரியின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, தன் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க முடிவு செய்து, ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டார் லொட்டரி கடையில் வெறும் 7 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வாங்கினார்.
மறுநாள் மாலை லொட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பிம்லா தேவி வாங்கிய டிக்கெட் ரூ.1 கோடி பரிசை வென்றதாக கடையின் உரிமையாளரான நரேஷ் மோங்கா, அந்தக் குடும்பத்தினருக்குத் தெரிவித்தார்.

அந்தச் செய்தியைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர், தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள உடனடியாக லொட்டரி கடைக்குச் சென்றனர். கடைக்காரர் அவர்களை வாழ்த்தி, இனிப்புகளை வழங்கி அந்த நிகழ்வைக் கொண்டாடினார்.
குடும்ப உறுப்பினர்கள் பாங்ரா நடனம் ஆடி இந்த நிகழ்வை கொண்டாடினர். உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களும் இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.