பம்பர் லொட்டரியில் 10 கோடி பரிசுவென்ற லொறி சாரதி! காலினை இழந்த மகனுக்காக உருக்கம்
இந்திய மாநிலம் பஞ்சாபைச் சேர்ந்த லொறி சாரதி ஒருவர் லொட்டரியில் ரூ.10 கோடி ஜாக்பாட்டை வென்றுள்ளார்.
ரூ.10 கோடி பரிசு
பஞ்சாபின் நூர்பூர் பேடியில் உள்ள பர்வா கிராமத்தைச் சேர்ந்த லொறி சாரதி ஹர்பிந்தர் சிங். குவைத்தில் பணியாற்றும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது ரூ.500க்கு லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு பம்பர் பரிசாக ரூ.10 கோடி விழுந்துள்ளது.
எனினும், அவரது பரிசுத்தொகையில் 30 சதவீதம் வரிப்பிடித்தம் போக மீதமுள்ள தொகை கிடைக்கும்.
என்னால் நம்ப முடியவில்லை
வெற்றியாளர் ஹர்பிந்தர் சிங் லொட்டரியில் பரிசு வென்றது குறித்து கூறுகையில், "என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளின் அருளால்தான் நான் இவ்வளவு பெரிய தொகையை வென்றுள்ளேன். ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது டிக்கெட் வாங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
கடந்த 15 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வரும் ஹர்பிந்தர், குவைத்திற்கு வேலைக்கு செல்ல நிறைய கடன் பெற்றிருக்கிறார்.
மேலும், அவரது மகன் தேவிந்தர் சிங் விபத்தில் இடது காலினை இழந்தார். இவற்றையெல்லாம் இப்பணத்தைக் கொண்டு சரி செய்ய உள்ளதாகவும் ஹர்பிந்தர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |