வழிமறித்த கொள்ளையர்கள்... துணிச்சலாக செயல்பட்ட இளம்பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனது காரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற இருவரை வாளைக் காட்டி துரத்தியடித்த இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
வழிமறித்த கொள்ளையர்கள்...
வெள்ளிக்கிழமை இரவு, பஞ்சாபிலுள்ள லூதியானா என்னுமிடத்தில் தனது மாமியார் மற்றும் சித்தியுடன் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் ஹர்ஜிந்த் கௌர் என்னும் பெண்.

அப்போது இரண்டு பேர் தங்கள் காரை பின்தொடர்வதை அந்தப் பெண்கள் கவனித்துள்ளனர்.
சந்தேகம் ஏற்பட்டாலும், காரின் வேகத்தைக் குறைத்து அவர்களை முன்னே செல்ல அனுமதித்துள்ளார் கௌர்.
ஆனால், அவர்கள் முன்னேறிச் செல்லாமல் காரையே வட்டமடித்ததுடன், திடீரென ஒருவர் கார் முன் கண்ணாடி மீது முட்டையை வீசியுள்ளார்.
அப்படி முட்டையை வீசும்போது காரின் சாரதி அதை அகற்ற தனது காரின் வைப்பரை இயக்கினால், முட்டை கண்ணாடி முழுவதும் பரவி முன்னே என்ன நடக்கிறது என்று பார்க்கவிடாமல் மறைத்துவிடும்.
ஆக, அந்த நபர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட கௌர், தனது காரில் வைத்திருந்த வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி அந்த நபர்களை துணிச்சலாக எதிர்கொண்டுள்ளார்.
அதற்குள் அந்த வழியாக பயணித்துக்கொண்டிருந்த பலர் கௌருக்கு ஆதரவாக திரள, அந்த இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்கள்.
கௌர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
இதற்கிடையில், கௌரின் துணிச்சலான நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |