இளைஞர்கள் மூர்க்கத்தனம்... சுய நினைவை இழந்த சுவிஸ் முதியவர்
சுவிட்சர்லாந்தின் Appenzell Ausserrhoden மாநிலத்தில் இளைஞர்கள் சிலரால மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட முதியவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தற்போது நேரடி சாட்சிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். Appenzell Ausserrhoden மாநிலத்தின் Herisau நகரில் பழச் சந்தை அமைந்துள்ள அரசு கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
60 வயதான இந்த நபருக்கும் இளைஞர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தொடர்ந்து அந்த இளைஞர்கள் இந்த முதியவரை படிக்கட்டில் இருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தலையில் அடிபட்டு, சுய நினைவை இழந்துள்ளார் அந்த முதியவர். ஆனால் அந்த இளைஞர்கள் சம்பவ இடத்தில் இருந்து மாயமாகியுள்ளனர்.
இந்த நிலையில் வழி போக்கர் ஒருவர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்து, காயமடைந்த முதியவரை ஹெரிசாவில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
தலையில் பட்ட காயத்தால், அவருக்கு நடந்த சம்பவம் தொடர்பில் நினைவில்லை என்பது மட்டுமின்றி, அவர் எந்த பகுதியில் வசிக்கிறார் என்பதும் அவருக்கு நினைவில் இல்லை.
தற்போது இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் மாநில பொலிசார், நேரடி சாட்சிகள் மற்றும் அந்த இளைஞர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், 16ல் இருந்து 20 வயதுடைய சுமார் 8ல் இருந்து 10 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர்.