தேர்தலில் வெற்றி பெற்ற மேக்ரானுக்கு புடின் வாழ்த்து: என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற இமானுவல் மேக்ரானுக்கு ரஷ்ய ஜனாதிபதியான புடின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேக்ரானுக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், உங்கள் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளிலும் நீங்கள் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன். அத்துடன், உங்களுக்கு நல்ல உடல் நலமும், நல்வாழ்வும் அமையவும் வாழ்த்துகிறேன் என்றும் கூறியுள்ளார் புடின்.
இந்த தகவல், கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்குப் பின் புடினை தொடர்புகொண்ட மிகச் சில அரசியல் தலைவர்களில் மேக்ரான் ஒருவர் ஆவார். உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இருவரும் மணிக்கணக்கான தொலைபேசி மூலம் பேசிக்கொண்டதை உலகமே அறியும்.
ஒரு பக்கம் இரு நாடுகளுக்குமான தூதரக உறவுகள் தொடர்ந்தாலும், உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது சர்வதேச தடைகள் விதித்த நாடுகளுடன் இணைந்துகொள்ளவும் பிரான்ஸ் தயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.