உங்கள் மகன்கள் வீடு வந்து சேரமாட்டார்கள்... ரஷ்ய தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய பிரதமர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பிய மண்ணில் ஏற்படும் மிக மோசமான சம்பவமாக இருக்கும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா படையெடுக்கும் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில், அமெரிக்கா ஒருபக்கம் துருப்புகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகிவர, தற்போது பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் கள நிலவரத்தை ஒப்பிடுகையில் ரஷ்யாவின் படையெடுப்பு என்பது வீணான செயல் என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜோன்சன், ரஷ்யா இதே கடும்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முயன்றால், ஆயிரக்கணக்கான ரஷ்ய தாய்மார்கள் தங்கள் மகன்களை மீண்டும் குடியிருப்பில் சந்திக்க மாட்டார்கள் என்றார்.
மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா 100,000 துருப்புக்களுக்கு மேல் குவித்துள்ளதால், நட்பு நாடுகள் ஒருங்கிணைந்த மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளுடன் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், நமது நட்பு நாடுகளைப் பாதுகாக்க அதிக நேட்டோ துருப்புக்களை நிலைநிறுத்த வேண்டும் எனவும் போரிஸ் ஜோன்சன் எச்சரித்தார்.
ரஷ்யா தமது ஆயுத பலத்தால் உக்ரைனின் நகரங்களில் கிராமங்களில் இரத்தம் விழ வைத்தால் அதனால் கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
உக்ரேனிய மக்களுக்கு தங்கள் நாட்டைப் பாதுகாக்க தார்மீக மற்றும் சட்டப்பூர்வ உரிமை உள்ளது, மேலும் அவர்களின் எதிர்ப்பு வலுவாகவும் உறுதியானதாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஆனால், செச்சினியா அல்லது போஸ்னியாவில் நடந்த முதல் போர் அல்லது 1945ல் இருந்து ஐரோப்பா கண்டத்தில் வேறு எந்த மோதலுடனும் ஒப்பிடக்கூடிய இரத்தக்களரியாக இது இருக்கும் என்றார் போரிஸ் ஜோன்சன்.