ரஷ்ய உடனான வர்த்தக உறவில் மிரட்டும் டிரம்ப் - இந்தியாவிற்கு வரும் புடின்
ரஷ்யா அதிபர் புடின் இந்தியாவிற்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை மிரட்டும் டிரம்ப்
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது.
உலகின் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள ரஷ்யா, எண்ணெய் மற்றும் எரிபொருள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை போருக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்த நாடுகளும் வாங்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
ரஷ்யாவிடமிருந்து, எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்கி வரும் நிலையில், அதனை தண்டிக்கும் விதமாக இந்திய பொருட்களுக்கு 35சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
அதன் பின்னர் அந்த வரியை 50 சதவீதமாக உயர்த்திய அவர், இந்தியா இன்னும் கூடுதல் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பால் உள்ளிட்ட விவசாய பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய அழுத்தம் கொடுப்பதால் இந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் உள்ளது.
இதன் காரணமாகவும், டிரம்ப் கூடுதல் வரி விதிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், "இந்தியா ஒரு போதும் விவசாயிகள் நலனில் சமரசம் செய்யாது. இதற்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என தெரியும். அனைத்திற்கும் தயாராக உள்ளேன்" என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் புடின்
இவ்வாறு ரஷ்யாவை மையமாக வைத்து இந்தியாவ உடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், ரஷ்யா அதிபர் புடின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், புடினின் இந்திய வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
புடின் இந்தியா வரும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |