இந்தியாவிற்கு வருகை தரும் புடின்: திகதியை உறுதிப்படுத்திய ரஷ்யா
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு வருகை தர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் புடின்
2026 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13ம் திகதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற உள்ளது.

இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பங்கேற்று உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேரடியாக கலந்து கொள்வார் என ரஷ்யாவின் ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த மே 14 மற்றும் 15 ம் திகதிகளில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதற்கு தலைமை தாங்கிய நிலையில், இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்றார்.
இந்த நிகழ்வை அடுத்து ரஷ்ய ஜனாதிபதியின் இந்தியா வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்தியாவிற்கு ஒரே ஆண்டில் இரண்டாவது முறை வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |