ஜேர்மன் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை முன்னெடுத்த புடின் நிர்வாகம்: கடும் கோபத்தில் சான்ஸலர் மெர்கல்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறி ஜேர்மனி உள்ளிட்ட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தகவலை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
மட்டுமின்றி ரஷ்ய நிர்வாகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து நாடுகளின் பிரதிநிதிகளும் விரும்பத்தகாத மக்கள் என்றும் ரஷ்ய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்டு பிரதிநிதிகளையும் நேரில் அழைத்து கண்டித்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சரகம், உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுள்ளமைக்கு தங்கள் கண்டனங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஸ்வீடன் மற்றும் போலந்து தூதரகங்களின் தூதர்களும், மாஸ்கோவில் உள்ள ஜேர்மன் தூதரகத்தின் அதிகாரியும் ஜனவரி 23 அன்று ரஷ்ய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் இராஜதந்திர அந்தஸ்துடன் பொருந்தாது என்றே ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.
1961-ல் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட வியன்னா மாநாட்டின் வழிகாட்டுதல்களின்படி தொடர்புடைய மூன்று நாடுகளின் தூதர்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இதனிடையே, ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள ஜேர்மன் அரசாங்கம், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த நாடுகடத்தப்படுவது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ள ஜேர்மன் சான்ஸலர் மெர்கல், இது தற்போது ரஷ்யாவில் நடப்பதன் மற்றொரு முகம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.