இந்தியாவில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்ய கத்தார் உறுதி
இந்தியா மற்றும் கத்தார் நாடுகளின் உறவை பலப்படுத்தும் வகையில் சில முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
10 பில்லியன் டொலர் முதலீடு
கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்திய தலைநகர் டெல்லிக்கு வருகை புரிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கத்தார் அரசர் இந்தியா வந்ததால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, உணவு பாதுகாப்பு ஆகிய பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இரு நாடுகளும் இணைந்து பல்வேறு ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.
இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நிதிமுறைகேடுகள் தவிர்ப்பு, பொருளதார கூட்டுறவு, ஆவண காப்பகத் துறை ஒத்துழைப்பு, இளைஞர் நலன் விளையாட்டு ஆகியவற்றிற்கு ஒப்பந்தம் போடப்பட்டன.
மேலும், இந்தியாவில் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, தளவாடங்கள், விருந்தோம்பல் மற்றும் பிற துறைகளில் கத்தார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று உறுதியளித்துள்ளது.
அதோடு, இரு நாடுகளும் தங்கள் ஆண்டு வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 28 பில்லியன் டொலராக இரட்டிப்பாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளன.
மேலும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 14 பில்லியன் டொலராக உள்ள நிலையில், அதை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்த கத்தார் அமீருடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு பயனுள்ள சந்திப்பு. இந்தியா - கத்தார் உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |