சுவிட்சர்லாந்தில் இனி பிரித்தானியர்களும் அந்த காரணத்தால் தனிமைப்படுத்தப்படலாம்!
இந்தியாவில் உருமாற்றம் கண்டுள்ள கொரோனா தொற்றில் பாதிப்பு பிரித்தானியாவிலும் அதிகரித்து வரும் நிலையில், சுவிஸ் வரும் பிரித்தானியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப வாரங்களாக நாளுக்கு புதிதாக 400,000 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டும், சுமார் 4,000 பேர்கள் வரையில் தினசரி சிகிச்சை பலனின்றி இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவிலும் இந்தியாவில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றானது பரவி வருவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, ஜூன் மாதத்தில் பிரித்தானியா சாதாரண நிலைக்கு திரும்பும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பிரதமர் ஜோன்சன் வெள்ளிக்கிழமை இந்த புதிய கொரோனா பரவல் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானியா மட்டுமின்றி, தற்போது சுவிஸிலும், புதிய கொரோனா தொற்றானது அடையாளம் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், கோடை காலத்திற்கு முன்னர் கொரோனா மீண்டும் உருமாற்றம் காண வாய்புள்ளதாகவும் சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியா பயணிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்க சுவிஸ் அரசியல்வாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.