ஜேம்ஸ் பாண்ட் பட காட்சியில் நடித்த ராணி எலிசபெத்.. ஹெலிகாப்டரிலிருந்து குதித்த வீடியோ
ஜேம்ஸ் பாண்ட் நடிகருடன் ஒரு காட்சியில் தன்னார்வமாக நடித்த ராணி எலிசபெத்
ராணி எலிசபெத் ஹெலிகாப்டரில் இருந்து குதிப்பது போல் படமாக்கப்பட்டது
மறைந்த பிரித்தானியா மகாராணி எலிசபெத் ஜேம்ஸ் பாண்ட் பட காட்சியில் நடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் மறைவு உலகளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராணி எலிசபெத் பங்குபெற்ற நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜேம்ஸ் பாண்ட் பட காட்சி ஒன்றில் ராணி நடித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான துவக்க விழாவில் ராணி எலிசபெத் பங்குபெற்றார். அவரை வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பது போல் ஒரு காட்சி மட்டும் படமாக்கப்பட்டது.
Best monarch ever pic.twitter.com/3RFSW9xYhj
— Rupert Myers (@RupertMyers) September 8, 2022
அதில் நடிகர் டேனியல் கிரேக்குடன் அவர் நடித்தார். குறித்த காட்சியில் ராணியை அரண்மனையில் சந்திக்கும் பாண்ட், அவரை விழாவிற்காக ஹெலிகாப்டரில் அழைத்து செல்கிறார். போட்டி அரங்கத்தை அடையும் முன் ராணியும், டேனியல் கிரேக்கும் பாராசூட்டில் இருந்து குதிப்பது போல் படமாக்கப்பட்டது. தொடக்க விழாவின் சிறப்பம்சமாக இந்த காட்சி அமைந்தது.
2013ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், இரண்டாம் எலிசபெத் மகாராணியை நடிக்க வைக்க எந்த சமரசமும் தேவைப்படவில்லை. ஏனெனில் அவரே ஆர்வமாக நடிக்க முன் வந்தார் என டேனியல் கிரேக் தெரிவித்தார்.