"நீங்க ராணியை பாத்திருக்கீங்களா" மகாராணியிடமே கேட்ட சுற்றுலா பயணி! அவர் சொன்ன வேடிக்கையான பதில்
அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் பிரித்தானிய மகாராணியிடமே வந்து "நீங்க ராணியை சந்தித்துள்ளீர்களா" என்று கேட்டுள்ளார்.
முன்னாள் அரச பாதுகாப்பு ஒருவர் பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இந்த சுவாரசியமான சம்பவத்தை கூறியுள்ளார்.
முன்னாள் அரச பாதுகாப்பு அதிகாரி ரிச்சர்ட் கிரிஃபின் ஸ்கை நியூஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னை அடையாளம் காணாத இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்த சம்பவம் பற்றி கூறிய வீடியோ வைரலாகிவருகிறது
ராணி எலிசபெத்தின் ஆட்சி ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. வியாழக்கிழமை அவரது மரணத்திற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் பல பயனர்கள் அவரது நகைச்சுவை தன்மையை நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ட்விட்டர் பயனர்கள் ராணியின் முன்னாள் அரச பாதுகாப்பு அதிகாரியான ரிச்சர்ட் கிரிஃபின், ஜூன் மாதம் அவரது பிளாட்டினம் ஜூபிலியை முன்னிட்டு இராணியைப் பற்றி மிகவும் வேடிக்கையான கதையைச் சொன்ன வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
மிகவும் வைரலாகிவரும் இந்த வீடியோவில், கிரிஃபின், ஸ்காட்லாந்தின் அபெர்டீன்ஷையரில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு அருகில், ராணி எலிசபெத் சுற்றுலாவிற்குச் சென்றபோது, அப்பகுதியில் விடுமுறைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடம் சென்றதாக கூறினார்.
கிரிஃபின் கூறியதாவது "ராணி எப்பொழுதும் நின்று வணக்கம் சொல்வார்... நாங்கள் முதலில் நின்ற தருணத்திலிருந்து அவர்கள் ராணியை அடையாளம் காணவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம் என்று ராணியிடம் கூறினார்கள். இறுதியாக அவள் எங்கே வசிக்கிறாள் என்று கேட்டனர்."
அவர்களுக்கு பதிலளித்த இராணி, "வெல், நான் லண்டனில் வசிக்கிறேன், ஆனால் மலைகளின் மறுபக்கத்தில் எனக்கு விடுமுறை இல்லம் உள்ளது" என்று கூறியதாக கிரிஃபின் நினைவு கூர்ந்தார்.
"ஒரு சுற்றுலாப் பயணி ராணியிடம் அடிக்கடி இங்கு வருவீர்களா என்று கேட்டார், அதற்கு பதிலளித்த இராணி, 'நான் சிறுவயதில் இருந்தே, 80 ஆண்டுகளுக்கு மேல்' வருவதாக கூறினார்.
உடனே சுற்றுலாப் பயணிகள் அவளிடம், "சரி, நீங்கள் 80 ஆண்டுகளாக வருகிறீர்கள் என்றால், நீங்கள் ராணியை சந்தித்திருக்க வேண்டும்?" என்று கேட்டதால் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக மாறியது" என்று கிரிஃபின் கூறினார்.
"வெல், நான் பார்த்தது இல்லை, ஆனால் டிக்கி இங்கே அவரை அடிக்கடி சந்திக்கிறார்" என்று கிரிஃபினை அவரது புனைப்பெயரை சொல்லி குறிப்பிடுகிறார்.
"வியப்புற்ற சுற்றுலாப் பயணிகள் என்னை நோக்கித் திரும்பி, அவர் (இராணி) எப்படிப்பட்டவர்?" என்று கேட்டதாக கூறினார்.
Former Royal protection officer Richard Griffin reminisces about a picnic he went on with the Queen at Balmoral and an encounter they had with two American tourists who did not realise they were in the company of the monarch.#PlatinumJubilee: https://t.co/orTd7551d3 pic.twitter.com/snTOgEoGu1
— Sky News (@SkyNews) June 3, 2022
அதற்கு சுற்றலா பயணிகளிடம் பதிலளித்த கிரிஃபின் "அவர் சில சமயங்களில் மிகவும் கோவமாக இருக்கலாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன், ஆனால் அவருக்கு ஒரு அழகான நகைச்சுவை உணர்வு உள்ளது" என்று கூறியுள்ளார்.
அதற்கும் மேலாக, சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் கிரிஃபின் மீது கையை போட்டு, கேமராவை ராணியின் கையில் கொடுத்து, இருவரையும் புகைப்படம் எடுத்துத் தரசொல்லி, ராணியை கட்டாயப்படுத்தினர். பின்னர், சுற்றுலா பயணிகள் இராணியுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றனர் என்று கிரிஃபின் கூறினார்.
வீடியோவின் முடிவில், "ராணி தன்னிடம், 'அமெரிக்காவில் உள்ள நண்பர்களிடம் அந்தப் புகைப்படங்களைக் காட்டும்போது நான் யாரென்று அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நான் யார் என்று யாராவது அவரிடம் கூறுவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியதாக கிரிஃபின் ஸ்கை நியூஸ் நிருபரிடம் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.