ராணியாரின் நல்லடக்கம் எப்போது? அடுத்த நான்கு நாட்களின் முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான தகவல்
ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, பின்னர் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் கொண்டு செல்லப்படும்.
உடல் எடின்பர்க் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விமான மார்க்கம் லண்டன் கொண்டுவரப்படும்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் எதிர்வரும் 19ம் திகதி நல்லடக்கம் செய்யப்படுவார் என்ற தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.
செப்டம்பர் 8ம் திகதி ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் காலமான இரண்டாம் எலிசபெத் ராணியாரின் உடல் ஞாயிறன்று எடின்பர்க் கொண்டு செல்லப்படுகிறது. பால்மோரல் மாளிகையில் இருந்து கார் மூலமாக 6 மணி நேர பயணத்தில் எடின்பர்க் சென்றடையும்.
@afp
பகல் 10 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு எடின்பர்க் சென்றடைவதுடன், ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, பின்னர் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் கொண்டு செல்லப்படும்.
திங்கட்கிழமை லண்டனில் இருந்து மூன்றாம் சார்லஸ் மன்னரும் அவரது மனைவியும் எடின்பர்க் செல்ல உள்ளனர். மதியம் 2.35 மணியளவில் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் இருந்து ராணியாரின் உடல் எடின்பர்கில் உள்ள செயின்ட் கில்ஸ் கதீட்ரலுக்கு கொண்டு செல்லப்படும்.
@reuters
மன்னரும் அரச குடும்பத்து உறுப்பினர்களும் ஊர்வலமாக நடந்தே செல்ல உள்ளனர். இரவு 7.20 மணிக்கு இரவு அஞ்சலி கூட்டம் ஒன்று மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு ராணியாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு செயின்ட் கில்ஸ் பேராலயத்தில் சிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்படும். தொடர்ந்து ராணியரின் உடல் எடின்பர்க் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமான மார்க்கம் லண்டன் கொண்டுவரப்படும்.
@pa
அங்கிருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய பகுதியில் பாதுகாக்கப்படும். புதன்கிழமை மதியம் 2.22 மணிக்கு துப்பாக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும்.
மன்னர் சார்லஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மெளனமாக அந்த வாகனத்தின் பின்னால் நடந்து செல்ல உள்ளனர். 3 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்திற்கு வந்து சேரும் ராணியாரின் உடலுக்கு கேன்டர்பரி பேராயர் குறுகிய ஆராதனை ஒன்றை முன்னெடுப்பார்.
@pa
வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நான்கு நாட்கள் ரானியாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும். இதனையடுத்து செப்டம்பர் 19ம் திகதி, திங்கட்கிழமை பகல் 10.44 மணிக்கு ஊர்வலமாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லப்படும்.
அங்கே அரசு மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் ஊர்வலமாக வெலிங்டன் ஆர்ச் மற்றும் பின்னர் வின்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்படும்.
@ap
வின்ட்சர் கோட்டை தான் கடந்த 1,000 ஆண்டுகளாக மன்னருக்கும் ராணியாருக்கும் குடும்ப மாளிகையாக இருந்து வருகிறது.
அதனால், அரச குடும்பத்தில் அனைவரது நல்லடக்கமும் வின்ட்சர் கோட்டையில் முன்னெடுக்கப்படுகிறது.