டிரம்புக்கு அழைப்பு இல்லை... ராணியார் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் 500 உலக தலைவர்கள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இடம்பெறுவார்கள்
இந்தியா, பிரேசில் உட்பட வட கொரியா தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
பிரித்தானிய ராணியாரின் இறுதிச் சடங்கில் 500 உலக தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்துகொள்ளும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இதில் ரஷ்யா, பெலாரஸ் மற்றும் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுடன், ஈரானுக்கு தூதரகம் ஊடாக மட்டும் மரியாதை செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
@AP
இந்த நிலையில், விருந்தினர்கள் பட்டியல் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் கண்டிப்பாக இடம்பெறுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் லண்டனுக்கு புறப்படும் சூழலில் இல்லை என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@thetimes
ஒவ்வொரு உலக தலைவரும் இன்னொருவரை உடன் அழைத்துவர அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவுஸ்திரேலிய பிரதமர் தம்முடன் 10 பேர்களை அழைத்துவர அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இறுதிச்சடங்கில் பங்கேற்கும் தலைவர்கள் அனைவருக்கும் ஞாயிறன்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் தலைமையில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
@AFP
மேலும், ஐரோப்பாவில் உள்ள அனைத்து அரச குடும்பத்தினரும் ராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பைடன் மட்டுமின்றி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட தலைவர்கள் ஏற்கனவே வருகையை உறுதி செய்துள்ளனர்.
@spalsh
மட்டுமின்றி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் வருகை சந்தேகம் என கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்தியா, பிரேசில் உட்பட வட கொரியா தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
@getty