பிரித்தானியாவின் அடுத்த ராணியாக கமிலா! வெளியான முக்கிய அறிக்கை
பிரித்தானியாவின் மன்னராக இளவரசர் சார்லஸ் முடிசூடும் போது, அவரது மனைவி கமிலா ராணியாராக பொறுப்பேற்பார் என அறிக்கை ஊடாக எலிசபெத் ராணியார் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரித்தானியாவின் ராணியாராக 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் திகதி முடிசூட்டிக்கொண்டதன் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் நிலையில், எலிசபெத் ராணியார் குறித்த தகவலை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் நிபுணர்கள் தரப்பு, இளவரசர் சார்லஸ் மன்னராக முடிசூடும் போது அவரது மனைவி கமிலா பார்க்கர் இளவரசியாக மட்டுமே அறியப்படுவார் என குறிப்பிட்டு வந்தனர்.
தற்போது அந்த விவாதத்திற்கு எலிசபெத் ராணியார் அறிக்கை ஊடாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், கமிலா பிரித்தானியாவின் ராணியாராக அறியப்படுவதை தாம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமது மகன் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் போது அவரது மனைவி கமிலா பிரித்தானியாவின் ராணியாராக அறியப்படுவார் எனவும், தமக்களித்து வந்த ஆதரவை தமது மகன் மற்றும் மருமகளுக்கும் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அறிக்கை வெளியான நிலையில், இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், தங்களை கௌரவப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.