ராணியின் இறுதிச் சடங்கு நாள் நிகழ்வுகள் இன்று எங்கே, எப்படி நடக்கும்?
காலமான ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பல நாள்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை விமர்சையான அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடக்கிறது.
காலையில் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் ராணியின் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெறும். பிறகு விண்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே மிக அணுக்கமான கல்லறை ஜெபம் நடைபெறும். பிறகு நெருக்கமானவர்கள் முன்னிலையில் அடக்கம் நடைபெறும்.
60 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்தபோது நடந்த அரசு மரியாதையுடன் கூறிய இறுதிச் சடங்கு நிகழ்வுக்குப் பிறகு மிகுந்த உணர்ச்சியும், விமர்சையும், சம்பிரதாயங்களும் நிறைந்த இறுதிச் சடங்காக இது இருக்கும்.
இறுதிச் சடங்கு நிகழ்வில் கூடுதலாக செய்யவேண்டிய திட்டங்கள் சிலதைப் பற்றி ராணியே குறிப்பிட்டுச் சென்றுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 19ம் தேதி திங்கள்கிழமை நிகழ்வுகள் எப்படி எங்கே எத்தனை மணிக்கு நடக்கும் என்ற விவரங்கள் நிரல் வரிசையாக:
6.30
வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராணியின் உடல் வைக்கப்பட்டிருப்பது அதிகாலையிலேயே முடிவுக்கு வரும். ராணியின் சவப்பெட்டியைப் பார்ப்பதற்காக பல்லாயிரம் பேர் இங்கே வரிசையில் வருகின்றனர்.
8.00
வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் 11 மணிக்கு நடைபெறவுள்ள ஜெபக்கூட்டத்துக்கு வரும் விருந்தினர்களுக்காக கதவுகள் திறக்கும்.
ராணியின் வாழ்க்கையையும், சேவையையும் அரச குடும்பத்துடன் சேர்ந்து நினைவுகூர, உலகம் முழுவதிலும் இருந்து நாடுகளின் தலைவர்கள் பறந்து வந்துகொண்டிருக்கிறார்கள். ஐக்கிய ராஜ்ஜியத்தின் மூத்த அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமர்கள் போன்றவர்களும் அங்கே இருப்பார்கள்.
ஐரோப்பா முழவதிலும் உள்ள அரச குடும்பங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பலர் ராணிக்கு ரத்த உறவினர்கள். பெல்ஜியம் அரசர் பிலிப் மற்றும் ராணி மத்தில்டே, ஸ்பெயின் அரசர் ஃபெலிப் மற்றும் ராணி லெட்டிசியா ஆகியோர் அங்கே வருவர்.
10.44
இந்த நாளின் சம்பிரதாயங்கள் மிகுந்த உள்ளார்வத்துடன் தொடங்கும். ராணியின் சவப்பெட்டிபுதன்கிழமை பிற்பகலில் இருந்து வைக்கப்பட்டுள்ள அலங்கார சட்டகத்தில் இருந்து எடுக்கப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு கொண்டு செல்லப்படும். அங்கே இறுதிச் சடங்குக்கான ஜெபம் நடக்கும்.
image - google
ராயல் கடற்படையின் பீரங்கி வண்டியில் வைத்து ராணியின் உடல் கொண்டு செல்லப்படும். 142 மாலுமிகள் அதை இழுத்துச் செல்வார்கள். மறைந்த இளவரசர் பிலிப்பின் மாமா மவுன்ட்பேட்டன் பிரபு இறுதிச் சடங்குக்காக இந்த வண்டி கடைசியாக 1979ல் பார்வைக்கு வந்தது. அதற்கு முன்பாக ராணியின் தந்தை 6ம் ஜார்ஜ் மறைந்தபோது 1952ம் ஆண்டு இந்த வண்டியைப் பார்க்க முடிந்தது.
இறுதி ஊர்வலத்தில் பீரங்கி வண்டிக்குப் பின்னால் புதிய அரசர், அவரது மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹேரி, அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் செல்வார்கள். ஸ்காட்டிஷ், ஐரிஷ் ரெஜிமெண்டுகளின் பைப் இசையும், டிரம் இசையும் சம்பிரதாயத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும். ராயல் விமானப்படை, கூர்க்கா படை ஆகியோரின் இசையும் இருக்கும்.
இந்தப் பாதையில் ராயல் கடற்படையினர், ராயல் மரைன் படையினர் அணிவகுப்பார்கள். நாடாளுமன்ற சதுக்கத்தில் கார்ட் ஆஃப் ஹானர் அணியினர் நிற்பார்கள். இந்த அணியில் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருப்பார்கள். ராயல் மரைன்ஸ் இசைக்குழுவினரும் இருப்பார்கள்.
11.00
2 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ராணியின் இறுதிச் சடங்கு ஜெபக்கூட்டம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தொடங்கும்.
அரசர்கள், ராணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு இது. இதில் 'லையிங் இன் ஸ்டேட்' என்று அழைக்கப்படும் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்படுதல், ராணுவ அணிவகுப்பு போன்ற கராறான சம்பிரதாயங்கள் இருக்கும்.
இறுதிச் சடங்கு ஜெபக்கூட்டம் நடக்கும் அபே ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம். இங்கே பிரிட்டிஷ் அரசர்களுக்கும், ராணிகளுக்கும் முடிசூட்டப்பட்டுள்ளது. 1953ல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவும் இங்கேதான் நடந்தது. 1947ம் ஆண்டு அப்போது இளவரசியாக இருந்த எலிசபெத் - இளவரசர் பிலிப் திருமணமும் இங்கேதான் நடந்தது.
18-ம் நூற்றாண்டில் இருந்து எந்த ஒரு முடியாண்ட அரசர் அல்லது அரசியின் இறுதிச் சடங்கு ஜெபக்கூட்டமும் அபேவில் நடக்கவில்லை. 2002ல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் தாயினுடைய இறுதிச் சடங்கு இங்கே நடந்தது.
வெஸ்ட்மின்ஸ்டர் டீன் டேவிட் ஹொய்ல் இந்த ஜெபக்கூட்டத்தை நடத்துவார். கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பை பிரசங்கம் நிகழ்த்துவார். பிரதமர் லிஸ் டிரஸ் வசனம் படிப்பார்.
11.55
இறுதிச் சடங்கின் இறுதிக் கட்டத்தில் 'தி லாஸ்ட் போஸ்ட்' இசைக்கப்படும். பிறகு இரண்டு நிமிட தேசிய அமைதி கடைபிடிக்கப்படும். ராணியின் பைப்பர் தேசிய கீதமும் லேமன்டும் இசைத்து நண்பகல் வாக்கில் இறுதிச் சடங்கை முடித்துவைப்பார்.
12.15
இந்த இறுதிச் சடங்கை அடுத்து, அபேவில் இருந்து ஹைட் பார்க் முனையில் உள்ள வெலிங்டன் வளைவு வரை ராணியின் சவப்பெட்டி நடந்தே எடுத்துச் செல்லப்படும்.
இந்தப் பாதையில் ராணுவத்தினரும் போலீசாரும் அணிவகுத்திருப்பர். தலைநகரத் தெருக்கள் வழியாக ஊர்வலம் மெதுவாக செல்லும்போது ஒரு நிமிட இடைவெளியில் பிக் பென் மணி இசைத்தபடி இருக்கும். ஹைட் பார்க்கில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் துப்பாக்கிகள் முழங்கிக் கொண்டிருக்கும்.
இந்தப் பாதையில் பார்ப்பதற்காக என்று குறிக்கப்பட்ட இடங்களில் நின்று மக்கள் ஊர்வலத்தைப் பார்க்கலாம்.
ஊர்வலத்தை வழிநடத்திச் செல்லும் ராயல் கனடியன் மௌன்ட்டட் போலீஸ் அணி ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி இசைக்குழு இருக்கும். ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த ஆயுதப் படையினர், போலீஸ், தேசிய சுகாதார சேவையை சேர்ந்தோர் ஆகியோரும் இதில் ஈடுபடுத்தப்படுவர்.
மீண்டும் பீரங்கி வண்டியில் செல்லும் ராணியின் உடலுக்குப் பின்னே அரசர், அரச குடும்ப உறுப்பினர்கள் நடந்து செல்வர். அரசரின் துணைவி ராணி கமில்லா, வேல்ஸ் இளவரசி, வெஸ்ஸக்ஸ் இளவரசி, சஸ்ஸக்ஸ் இளவரசி ஆகியோர் கார்களில் பின் தொடர்ந்து செல்வர். வெலிங்டன் வளைவு அருகே சுமார் பகல் 1 மணி அளவில் சவப்பெட்டி புதிய அரசு சவ ஊர்திக்கு மாற்றப்படும். அங்கிருந்து ராணியின் உடல் விண்ட்சர் கோட்டைக்கு இறுதி ஊர்வலம் புறப்படும்.
தொடர்ச்சியாக 1000 ஆண்டுகளுக்கு மேலாக 40 முடியரசர்கள் அரசிகள் வாழ்ந்த இந்தக் கோட்டை ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு வாழ்க்கை முழுதும் சிறப்பான முக்கியத்துவம் உடையதாக விளங்கியது.
போர்க்காலத்தில் லண்டன் நகரம் குண்டு வீச்சு அபாயத்தில் இருந்தபோது இளம்பருவத்தில் இருந்த எலிசபெத் இங்கே தங்க வைக்கப்பட்டார். சமீபத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் இந்தக் கோட்டையை தனது நிரந்தர வசிப்பிடமாக ஆக்கிக்கொண்டார்.
15.00
சவப்பெட்டியை ஏற்றி வரும் வண்டி விண்ட்சர் கோட்டையின் லாங் வாக் பாதைக்கு வந்த பிறகு, பங்கேற்போர் அங்கிருந்து நடந்து ஊர்வலமாக செல்வார்கள். இந்த 5 கி.மீ. பாதையில் ஆயுதப்படையினர் அணி வகுத்திருப்பர்.
இந்த லாங் வாக் பாதையில் செல்லும் இறுதி ஊர்வலத்தைப் பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். சிறிது நேரம் கழித்து, விண்ட்சர் கோட்டையின் குவாட்ராங்கிள் பகுதியில் அரசரும் மூத்த அரச குடும்பத்தினரும் ஊர்வலத்தில் இணைந்துகொள்வர்.
கோட்டையின் செபாஸ்டோபோல், கர்ஃப்யூ டவர் மணிகள் நிமிடத்துக்கு ஒரு முறை அடிக்கும். கோட்டை மைதானத்தில் இருந்து துப்பாக்கிகள் முழங்கும்.
16.00
புனித ஜார்ஜ் தேவாலயத்துக்குள் சவப்பெட்டி நுழையும். அங்கே கல்லறை ஜெபம் நடக்கும். திருமணம், ஞானஸ்நானம். இறுதிச் சடங்கு ஆகியவற்றுக்கு வழக்கமாக அரச குடும்பத்தினர் இந்த தேவாலயத்தையே தேர்ந்தெடுப்பர். 2018ல் சஸ்ஸக்ஸ் இளவரசர் ஹேரிக்கும் சஸ்ஸக்ஸ் இளவரசி மேகனுக்கும் இங்கேதான் திருமணம் நடந்தது. ராணியின் காலம் சென்ற கணவர் இளவசர் பிலிப்பின் இறுதிச் சடங்கும் இங்கேதான் நடந்தது.
கல்லறை ஜெபத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான தனிப்பட்ட முறையில் நெருக்கமான விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொள்வர். இந்த எண்ணிக்கை சுமார் 800 பேர் இருக்கலாம். இந்த ஜெபத்தை விண்ட்சர் டீன் டேவிட் கோனர் நடத்தி வைப்பார். கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பை ஆசி வழங்குவார்.
ராணியின் ஆட்சி நிறைவுறுவதைக் குறிக்கும் சம்பிரதாயங்கள் இப்போது நடக்கும்.
ஏகாதிபத்திய அரச மணிமுடி, ராணியின் சிலுவைக் கோளம், செங்கோல் போன்றவை சவப்பெட்டியின் மேலே இருந்து அகற்றப்படும். கடைசியாக ராணியிடம் இருந்து மணி முடி நீங்கும். கடைசி பாடல் இசைக்கப்பட்ட பிறகு ராணியின் கம்பனி கேம்ப் கலர், கிரெனேடியர் கார்ட்ஸ் கம்பளம் அல்லது கொடி ஒன்றை சவப்பெட்டியின் மீது போர்த்துவார் அரசர்.
கிரனேடியர் கார்ட்ஸ் என்ற படையினர் அரசருக்கோ, அரசிக்கோ சம்பிரதாய கடமைகளை மேற்கொள்ளும் மூத்த காலாட் படையினர் ஆவர்.
எம்.ஐ.5 படையின் முன்னாள் தலைவரும் லார்ட் சேம்பர்லெய்னுமான பேரோன் பார்க்கர் தனது அதிகாரக் கோலை உடைத்து சவப்பெட்டியின் மீது வைப்பார். அரச குடும்பத்தில் அரசியின் மிக மூத்த அதிகாரி என்ற முறையில் அரசிக்கான தனது சேவையை அவர் முடித்துக் கொள்வதை இது குறிக்கும்.
பிறகு ராணியின் உடல் ராயல் வால்ட்டில் இறக்கப்படும். ராணியின் பைப்பர் இசைப்பார். பிறகு, 'தேவனே அரசனை காப்பாற்று' என்ற கீதம் பாடப்படும். விண்ட்சர் கோட்டையில் பைப்பர் கீதம் இசைக்கவேண்டும் என்பது ராணியே தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்ட கோரிக்கை என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
16.45
கல்லறை சேவை முடிவுக்கு வந்து அரசரும், அரச குடும்பத்தினரும் தேவாலயத்தை விட்டு கிளம்புவர்.
19.30
மாலையில், குடும்பத்தினர் மட்டும் பங்கு பெறும் ஒரு ஜெபத்துக்குப் பிறகு, புனித ஜார்ஜ் தேவாலயத்துக்குள் இடம் பெற்றுள்ள ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் தனது கணவர் எடின்பரோ கோமகனுடன் ராணி ஒன்றாகப் புதைக்கப்படுவார்.
அவரது கல்லறையின் மேலே பதிப்பிக்கப்படும் கல்லில் 'ELIZABETH II 1926-2022' என்று பொறிக்கப்பட்டிருக்கும்.