மைக்ரோசாப்ட் நிறுவன வேலையை விட்டு தொடங்கிய நிறுவனம்: இன்றதன் மதிப்பு ரூ 37,000 கோடி
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பன்சால், தனது சொந்த தொழில் பயணத்தைத் தொடங்க முடிவு செய்தார்.
முக்கியமான நகரங்களில்
கடந்த 2010ல் அமித் சவுத்ரி மற்றும் சுமீத் கபாஹி ஆகியோருடன் இணைந்து Lenskart நிறுவனத்தை நிறுவினார் பெயுஷ் பன்சால். இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு கண்ணாடிகளை அணுகக்கூடிய வகையில், குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான ஒன்லைன் தளமாக லென்ஸ்கார்ட் தொடங்கப்பட்டது.
அதன் பின்னர் படிப்படியாக இந்தியாவின் முக்கியமான நகரங்களில் கடைகளை திறக்க முடிவு செய்தார்கள். அந்த முயற்சி வெற்றி பெற, பின்னர் ஒவ்வொரு நகரங்களிலும், முக்கிய பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டது.
இன்று லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 37,290 கோடி என்றே கூறப்படுகிறது. ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி முதலீட்டு ஆணையம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ததை அடுத்தே சந்தை மதிப்பு அதிகரித்தது.
லென்ஸ்கார்ட் மட்டுமின்றி WatchKart, JewelsKart, மற்றும் BagsKart என புதிய நிறுவனங்களை பன்சால் அறிமுகம் செய்துள்ளார். ஆனால் லென்ஸ்கார்ட் போன்று அவை பெருமளவு மக்களால் ஈர்க்கப்படவில்லை.
கடின உழைப்பு, உறுதிப்பாடு
2020ல் லென்ஸ்கார்ட் நிறுவனம் மதிப்புமிக்க யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது. லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் வெற்றி பன்சாலுக்கு தனிப்பட்ட ஆதாயத்தையும் வழங்கியது. வெளியான பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பன்சாலின் சொத்து மதிப்பு ரூ 600 கோடி என்றே கூறப்படுகிறது.
பெயுஷ் பன்சாலின் கதை பல வளரும் தொழில்முனைவோருக்கு உத்வேகம் அளிக்கும் ஒன்றாகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நிலையான வேலையை விட்டுவிட்டு வெளியேறுவது முதல் பில்லியன் டொலர் நிறுவனத்தை உருவாக்குவது வரை, கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பதை அவர் வெளிக்காட்டியுள்ளார்.
கனடாவில் பொறியியல் பட்டம் பெற்ற பன்சால், அமெரிக்காவுக்கு சென்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தார். இந்த நிலையில் தான் சொந்தமாக சாதிக்க வேண்டும் என்ற உள் உணர்வு அவருக்கு ஏற்பட்டு, வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |