ரபாடாவின் ஹாட்ரிக் விக்கெட் வீண்., தோல்வியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து! வெற்றியுடன் வெளியேறிய தென் ஆப்பிரிக்கா
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றையை ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட இந்த தொடரிலிருந்து வெளியேறுகிறது.
அதே சமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் தோல்வியுற்றாலும் க்ரூப்-1 புள்ளி பட்டியலில் அதிகமான ரன்ரேட்டுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி இந்த தொடரில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக க்ரூப்-1 புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அவுஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபுஅமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று ஷார்ஜாவில் நடைப்பெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை எடுத்தனர்.
இதனையடுத்து 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கவுரைகளான ஜேசன் ராய், பட்லர் ஜோடி நல்ல துவக்கம் தந்தனர்.
ஜேசன் ராய் 15 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார்.
பின்னர் பட்லர் - முகமது அலி கூட்டணி எண்ணிக்கையை உயர்த்த தொடங்கியது. ஆனால், 26 ஓட்டங்களில் பட்லர் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பெர்ஸ்டைவ் ஒரே ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
வரிசையாக இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அலியுடன் ஜோடி சேர்ந்த மாலன் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். 13வது ஓவரில் அலி 37 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடந்து மாலன் 33, லிவிங்ஸ்டோன் 28 ஓட்டங்களிடன் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டன. தென் ஆப்பிரிக்கா அணியிலிருந்து கடைசி ஓவரை ரபாடா வீசினார்.
முதல் மூன்று பந்துகளில் வோக்ஸ், மார்கன், ஜோர்டன் என மூவரையும் வரிசையாக அவுட்டாக்கி ஹார்ட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம், ஆட்டம் தென் ஆப்பிரிக்கா அணியின் கைக்கு வந்தது.
இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்து தோல்வியை தழுவியது.