கனேடிய புலம்பெயர்தல் அலுவலகத்திலேயே இனவெறுப்பு... வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்கள்
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகத்திலேயே இனவெறுப்பு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
அலுவலக பணியாளர்களும் மேற்பார்வையாளர்களும் தங்களுடன் பணிபுரியும் கருப்பினத்தவர் முதலானோரை இனரீதியாக விமர்சிப்பதாகவும், முன்னேற விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிதாக வேலைக்கு சேருவோர், பணியின் அழுத்தம் தாள இயலாமல் சில மாதங்களுக்குள்ளேயே வேலையை விட்டுச் செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக, மொன்றியலிலுள்ள கால் சென்டரில் பணிபுரிவோர், தொலைபேசியில் ஒருவர் தன் சகோதரன் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூற, மற்றொருவரோ தன் உறவினரான பெண் ஒருவர் வன்புணரப்பட்டதாக கூறி கண்ணீர் வடிக்க, இந்த பயங்கரங்களையெல்லாம் கேட்கும் இந்த கால் சென்டர் ஊழியர்கள், இயந்திரம் போல உடனடியாக அடுத்த அழைப்பை கவனிக்கவேண்டுமாம்.
கேட்ட பயங்கர செய்தியால் மனம் பதறிப்போயிருக்க, ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு கணம் கூட எடுக்க முடியாதாம்.
தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட கருப்பினத்தவரான ஒரு பெண், கடுமையான அழுத்தத்திற்கிடையே பணி செய்யும் பணியாளர்கள் கழிவறைக்குச் செல்லக்கூட சரியாக அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார். இயற்கை உபாதையைக் கழிக்க சிறிது அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கூட, என்ன நடக்கிறது, ஏன் வேலையில் பின்தங்கியுள்ளீர்கள் என மின்னஞ்சல் வருமாம்.
இன்னொருவரோ, நிறத்தின் அடிப்படையில் பிரமோஷன்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கிறார். உனக்கு பிரமோஷன் பெற தகுதி இல்லை என்பது போலவே நிறத்தின் அடிப்படையிலானவர்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கிறார் அவர். நான் என்ன கின்டர்கார்ட்டன் குழந்தையா, கையைத் தூக்கி, மிஸ், சிறுநீர் கழிக்கவேண்டும் என்று கேட்க? என்கிறார் அந்தப் பெண்.
ஆக, புலம்பெயர்தல் அலுவலகத்திலேயே கடுமையான இனவெறுப்புக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து, பரபரப்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.