இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல்! மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி, பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டியின் போது, ப்ளாக் 22 பகுதியில் இருந்த இந்திய ரசிகர்களை, இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் சண்டைக்கு இழுத்துள்ளனர். மேலும் மோசமான வார்த்தைகளால் திட்டி கிண்டல் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் இந்திய ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால் அவர்களோ அமைதியாக அமருங்கள், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
இதனை ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், 'இன்றைய டெஸ்ட் போட்டியில் இனவெறி துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகளை கேட்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். எட்ஜ்பாஸ்டனில் உள்ள சக ஊழியர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், அவர்கள் விசாரணை செய்வார்கள். கிரிக்கெட்டில் இனவெறிக்கு இடமில்லை' என அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
We are very concerned to hear reports of racist abuse at today's Test match. We are in contact with colleagues at Edgbaston who will investigate. There is no place for racism in cricket
— England and Wales Cricket Board (@ECB_cricket) July 4, 2022