தங்கள் தாய்மொழியில் பேசிக்கொண்டிருந்த வெளிநாட்டவர்களை வம்புக்கிழுத்த கனேடியர்: கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோ
கனடாவில் தங்கள் தாய்மொழியில் பேசிக்கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவரிடம் வம்பு செய்துள்ளார் கனேடியர் ஒருவர்.
இந்த விடயம் வெளிநாட்டவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில், தங்கள் தாய்மொழியில் பேசிக்கொண்டிருந்த வெளிநாட்டவர்கள்களிடம் கனேடியர் ஒருவர் வம்புச் சண்டைக்கு செல்வதைக் காட்டும் வீடியோ ஒன்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு விடயங்களுக்காக புலம்பெயர்ந்தோரை சார்ந்திருக்கும் நாடு கனடா என கனடா பிரதமரே கூறியிருக்கிறார்.
ஆனாலும் புலம்பெயர்ந்தோரை, வெளிநாட்டவர்களைக் கண்டால் வெறுப்பைக் காட்டும் சிலர் கனடாவில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
ஆல்பர்ட்டாவில் வாழும் Donna Damaso என்ற பெண், வான்கூவர் விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது கனேடியர் ஒருவர் ஆசிய நாட்டவர்களான பெண்கள் இருவரிடம், இது கனடா இங்கே ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என சத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார் அவர்.
இத்தனைக்கும் அவர்கள் தங்களுக்குள்தான் தங்கள் தாய்மொழியில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனாலும், அந்த நபர் அவர்களை வம்புக்கிழுக்க, நீங்கள் ஒரு இனவெறுப்பாளர் என்று சத்தமிட்டிருக்கிறார் Donna.
நீங்கள் ஜப்பானுக்குச் சென்றால் ஜப்பானிய மொழியில்தான் பேசவேண்டும், அப்படியானால் கனடாவுக்கு வந்தால் கனேடிய மொழிகளில்தான் பேசவேண்டும் என்கிற தொனியில் அவர் சத்தமிட, அந்தக் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார் Donna.
தங்களுக்காக குரல் கொடுத்ததற்காக Donnaவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அந்த பெண்கள், அவரையும் ஜாக்கிரதையுடன் இருந்துகொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
இதுவரை 300,000 பேர் அந்த வீடியோவைப் பார்வையிட்டுள்ள நிலையில், பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது அந்த வீடியோ.
குறிப்பாக கனடாவில் வாழும் வெளிநாட்டவர்கள் அந்தக் காட்சியால் கோபமடைந்துள்ளார்கள். Stand With Asians Coalition என்னும் அமைப்பின் இணை நிறுவனரான Doris Wai Ki Mah, அந்த வீடியோவைப் பார்த்ததும் தனக்கு பயங்கர கோபம் வந்ததாகத் தெரிவிக்கிறார்.
என் அம்மா கூட ரயிலில்தான் பயணிக்கிறார். அவர்களுக்குக் கூட இப்படி நடக்கக்கூடும் என்று கூறும் Doris, அந்த நபர் சொல்வதைப் பார்த்தால், நீங்கள் கனடாவிலிருந்துகொண்டு ஆங்கிலத்தில் பேசாமல் ஏன் உங்கள் தாய்மொழியில் பேசுகிறீர்கள் என்பது போலிருக்கிறது என்கிறார்.
கனடா பலவேறு கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடு என்று கூறும் Doris, நாம் மற்ற இனத்தவர்களுக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்கிறார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் கனடாவில் இனவெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துவருவதைக் காட்டுகிறது என New Westminster-Burnaby நாடாளுமன்ற உறுப்பினரான Peter Julian என்பவரும் தெரிவித்துள்ளார்.
ஆக, கனடாவில் தங்கள் தாய்மொழியில் பேசிக்கொண்டிருந்த வெளிநாட்டவர்களிடம் கனேடியர் ஒருவர் வம்புச்சண்டைக்குச் சென்ற விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.