ஜேர்மனியில் இனவெறுப்பு வீடியோவால் உருவான பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம்
ஜேர்மனியில் வைரலான இனவெறுப்பு வீடியோ ஒன்றால் உருவான பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு இனவெறுப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் அரசியல் தலைவர்கள் முதலானோர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இனவெறுப்பு வீடியோ
ஜேர்மனிக்கு சொந்தமான Sylt என்னும் தீவில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றின் வெளியே இளைஞர்கள் சிலர் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த இளைஞர்கள், பிரபல காதல் பாடலான, Love forever என பொருள்படும் ’L'amour toujours’ என்னும் பாடலின் வரிகளை மாற்றி, வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள், ஜேர்மனி ஜேர்மானியர்களுக்கே... வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள் என பாடுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
அத்துடன், அவர்களில் ஒருவர் ஹிட்லர் போல மீசை வைத்துக்கொண்டு, நாஸி சல்யூட் அடிக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. ஜேர்மன் பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை துவக்கி நடத்திவருகிறார்கள்.
Image: Daniel Karmann/dpa/picture
அடுத்த இனவெறுப்பு சம்பவம்
அந்த வீடியோவால் உருவான பரபரப்பு அடங்குவதற்குள், வெள்ளிக்கிழமை மாலை, பவேரியா மாகாணத்திலுள்ள Erlangen என்னுமிடத்தில் நடைபெற்ற பியர் திருவிழாவில், இரண்டு இளைஞர்கள், முறையே 21 மற்றும் 26 வயதுடையவர்கள், அதே பாடல் ஒலிக்கும்போது, வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள் என முழக்கமிட்டுள்ளார்கள்.
சீருடையில் இல்லாத இரண்டு பொலிசார் இந்த சம்பவதைக் கண்டுள்ளார்கள். உடனடியாக அந்த திருவிழா நடைபெற்ற மதுபான விடுதியிலிருந்து, இனவெறுப்பு கோஷமிட்ட இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாகவும் ஒரு விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் ஜேர்மன் சேன்ஸலர் உட்பட அரசியல் தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ள நிலையில், சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் இந்த இனவெறுப்பு சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |