48 வயதில் இறந்திருக்கிறார்! எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாக.. மீனாவின் கணவர் குறித்து குடும்ப நண்பர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்தது அதிர்ச்சியாக இருந்தது என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கூட்டுறவு முதன்மை மற்றும் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு செயலாளருமான ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, வித்யாசாகரின் மரணம் அதிர்ச்சி அளித்ததாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'கலா, மீனா எல்லோரும் எங்கள் குடும்ப நண்பர்கள். நடிகை, மேடம் மீனா அவர்களின் கணவர் மதிப்புக்குரிய வித்யாசாகர் 48 வயதில் நேற்று இரவு இறந்திருக்கிறார். ஏற்கனவே நான் சுகாதார செயலராக இருந்தபோது கூட, முதலமைச்சர் அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
ஜனவரியில் இருந்து அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது. ஆனால் அவர் இறந்த விடயம் எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த நேரத்தில் இது மிகவும் வருத்தமான, அதிர்ச்சியான செய்தி என்று மட்டும் தான் கூற முடியும்.
எங்கள் தரப்பில் இருந்து அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் மாநகராட்சியுடன் இணைந்து செய்வோம்' என தெரிவித்துள்ளார்.