விஷாலுக்கு தைரியம் இருந்தால் அவரை அடிக்கட்டும்! நானும் துடைப்பத்துடன் வருகிறேன் - கொந்தளித்த நடிகை ராதிகா
ஹேமா கமிஷன் அறிக்கை குறித்த கேள்வி விஷால் அளித்த பதிலை குறிப்பிட்டு, நடிகை ராதிகா ஆவேசமாக பேசியுள்ளார்.
ஹேமா கமிஷன் அறிக்கை
மலையாள திரையுலகில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளருமான விஷால் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்தபோது, தவறான எண்ணத்தில் அழைக்கும் திரையுலகினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் விஷாலின் கருத்துக்கு பதிலடியாக நடிகை ராதிகா ஊடகத்திடம் பேசியுள்ளார்.
நடிகை ராதிகா ஆவேசம்
அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் பிரபல பாடகி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து குற்றச்சாட்டு கூறினார். அவரிடம் ஏன் இத்தனை நாட்கள் கழித்து சொல்கிறீர்கள்? இதற்கு என்ன சாட்சி உள்ளது? என பல கேள்விகளை கேட்டார்கள். ஒரு பெண்ணின் மனதில் ஓடக்கூடிய விடயங்களை ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது.
அந்த திறமையான பாடகி, தனது வாய்ப்புகளை இழந்து கஷ்டப்பட்டார். அவருக்காக யார் வந்து குரல் கொடுத்தார்கள்? திரைத்துறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடிகைகள் அவர்கள் செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியிருப்பது முறையான பதில் அல்ல. இது ஒரு தலைவர் பேசும் பேச்சு கிடையாது.
நடிகைகள் குறித்து யூடியூபர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியிருப்பதை பார்த்தேன். விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு நானும் வருகிறேன்" என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |