உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் பிரான்ஸ்... மத அடிப்படைவாதி இளைஞரால் பட்டப்பகலில் கோர சம்பவம்
இஸ்லாமிய மத அடிப்படைவாதி என நம்பப்படும் ஒருவரால் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸில் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர பயங்கரவாத எச்சரிக்கை
இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவிக்கையில், நாடு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவசர பயங்கரவாத எச்சரிக்கையுடன் இருக்கும் என்றார்.
@shutterstock
வடக்கு பிரான்சின் அராஸில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரை, கண்காணிப்பில் இருந்து வந்த இஸ்லாமிய தீவிரவாதி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
57 வயதான Dominique Bernard என்ற ஆசிரியர் பாடசாலை வளாகத்தில் வைத்தே காயங்களுடன் உயிருக்கு போராடி, பின்னர் இறந்தார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில்,
20 வயதான முகமது என்ற இளைஞர் கத்தியால் தாக்கி வன்முறையில் ஈடுபட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் காயங்களுடன் தப்பியுள்ளனர் என்றார். சம்பவத்தின் போது அந்த நபர் பலமுறை அல்லாஹு அக்பர் என கத்தியதாக அப்பகுதியில் இருந்த பலர் கேட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தாக்குதலில் ஈடுபட்ட முகமதுவின் 22 வயது சகோதரரும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தண்டிக்கப்பட்டு 5 ஆண்டுகள் மற்றூம் 18 மாதங்களுக்கு சிறையில் அடைபட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2014ல் வெளியேற்ற உத்தரவு
முகமது தனது பெற்றோர் மற்றும் நான்கு உடன்பிறப்புகளுடன் 2008ல் பிரான்சுக்கு வந்துள்ளார். கடந்த 11 நாட்களுக்கு முன்னர் தான் முகமது மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஆனால் போதுமான காரணங்கள் இல்லாததால், கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
@reuters
தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், தாக்குதல்தாரியை மடக்கிப் பிடித்துள்ளனர். சுமார் 10 நிமிடங்களில் அனைத்தும் நடந்து முடிந்ததாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சம்பவம் நடந்த அராஸ் பகுதிக்கு சென்றுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார். தாக்குதல்தாரியின் குடும்பத்தினருக்கு பிப்ரவரி 2014ல் வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாகவும்,
ரஷ்யாவிற்கு விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மனித உரிமைகள் அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நாடுகடத்தப்படுவதை ரத்து செய்ய வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |