RAF ஃபேர்போர்ட் தளத்தில் குண்டு வைப்பு சதி: கைது செய்யப்பட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை
RAF Fairford Probe 5 British National Bailed: RAF ஃபேர்போர்ட் தளத்திற்கு அருகே பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பிரித்தானிய குடிமக்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
5 பிரித்தானியர்களுக்கு ஜாமீனில் விடுதலை
பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய 5 ஆண்கள் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வேன்கள் நடமாடியது தொடர்பாக விவசாயி ஒருவர் 999-க்கு அவசர அழைப்பு கொடுத்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சந்தேகத்திற்குரிய வேன்களில் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவொரு வெடிப்பொருளும், ஆபத்தான பிற பொருட்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து RAF ஃபேர்போர்ட் தளத்திற்கு அருகே பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பிரித்தானிய ஆண்களும் விசாரணைக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதே சமயம் இந்த விவகாரத்தில் வெளிநாட்டு சதிக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் லாரன்ஸ் டெய்லர் தகவல் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அதிர்ச்சி
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 நபர்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது தனக்கு வியப்பை ஏற்படுத்துவதாகவும், அமெரிக்காவாக இருந்திருந்தால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்காது என்றும் டிரம்ப் தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் பறக்க பிரித்தானியா அனுமதிக்க கூடாது என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்குரிய இந்த பயங்கரவாத செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈரான் மீது சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், RAF ஃபேர்போர்ட் குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் தங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று லண்டனில் உள்ள ஈரானிய தூதரகம் தங்களது அறிக்கையில் திட்டவட்டமாக மறுத்துள்ளது.