தேனிலவுக் கொலை வழக்கு: குடும்பத்தில் ஒரு ஆச்சரிய நிகழ்வு
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மணமகன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த மணமகன் குடும்பத்தில் ஒரு நல்ல விடயம் நடந்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தேனிலவு கொலை வழக்கு
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) கடந்த மே மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போன ராஜா, பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ராஜா கொலை தொடர்பாக அவரது மனைவியான சோனம், சோனமுடைய காதலரான ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள்.
குடும்பத்தில் ஒரு நல்ல செய்தி
இந்நிலையில், ராஜா ரகுவன்ஷியின் அண்ணனான சச்சின் ரகுவன்ஷிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு குடும்பத்தினர் ராஜா என்றே பெயர் சூட்டியுள்ளார்கள்!
விடயம் என்னவென்றால், ராஜா உயிரிழந்த அதே நாளில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட அவர் உயிரிழந்த அதே நேரத்தில், அதாவது, இந்து முறைமைப்படி, சந்திர மாதத்தின் 11ஆம் நாளில், மதியம் 2.42 மணிக்கு, அந்தக் குழந்தை பிறந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சச்சின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், ராஜாவே மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளதாக ராஜாவின் தாய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ராஜாவின் தம்பியான விபின் ரகுவன்ஷியோ, இது தற்செயலாக நிகழ்ந்த விடயம் அல்ல, இது தெய்வச் செயல், கடவுள் மீண்டும் ராஜாவை எங்களிடம் அனுப்பியுள்ளார் என்கிறார்.
திங்கட்கிழமை மாலை வீட்டுக்கு வந்த குழந்தையையும் அதன் தாயையும் அலங்கரிக்கப்பட்ட காரில் அழைத்துவந்த குடும்பத்தினர், தங்கள் வீட்டை அலங்காரம் செய்து குழந்தை பிறந்த மகிழ்ச்சியை குதூகலத்துடன் கொண்டாடி வருகிறார்கள். வீட்டின் முன், ஒரு பதாகை தொங்குகிறது. அதில், ‘ராஜா திரும்ப வந்துவிட்டார்’ என எழுதப்பட்டுள்ளது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |