ஏ.ஆர்.ரஹ்மானை மதரீதியாகச் சுருக்குவது அற்பத்தனமான இழிச்செயல்: சீமான் காட்டம்
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இசைநிகழ்ச்சி குளறுபடி
சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்கள் வருவதற்கு காலதாமதம் உள்ளிட்ட பல பிரச்சனை நிகழ்ந்தது.
இந்த விவகாரத்திற்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தரப்பில், ஏ.ஆர்.ரஹ்மானை தாக்கி பதிவிட வேண்டாம் என்றும், மன்னிப்பு கோரியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ரகுமானுக்கு சீமான் ஆதரவு
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், " ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்?’ எனும் இசை நிகழ்ச்சி விழாவில் ஏற்பட்டக் குளறுபடிகளும், சிரமங்களும் வருத்தத்திற்குரியது.
இடங்களை ஒதுக்கீடுசெய்வதில் ஏற்பட்டக் குழப்பங்களினாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டதால் நேர்ந்த பாதிப்புகளினாலும் பொதுமக்கள் வெளிப்படுத்திய உள்ளக்குமுறல் மிக நியாயமானது. அதனை உணர்ந்தே ஏ.ஆர்.ரகுமான் தார்மீக அடிப்படையில், நடந்தத் தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறி வருந்தியிருக்கிறார்.
மேலும், இந்நிகழ்ச்சியைச் சரிவர காண இயலாது பாதிக்கப்பட்டதாக தெரிவித்தப் பார்வையாளர்களுக்கு அவர்களுக்குரிய நுழைவுச்சீட்டுக் கட்டணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது ஏ.ஆர்.ரகுமான் உள நேர்மையை வெளிப்படுத்துகிறது.
ஏற்பாட்டாளர்கள் தவறு செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசுக்கு முழு உரிமையுண்டு. இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரகுமானை ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்கச்சொல்லி குற்றப்படுத்துவது சரியானதல்ல. அந்நிகழ்ச்சியை நடத்திய ஏற்பாட்டாளர்களது நிர்வாகத்திறமையின்மையினாலும், அலட்சியத்தினாலும் விளைந்த துயருக்கு ஏ.ஆர்.ரகுமான் மீது ஒருசாரார் வன்மத்தைக் கட்டவிழ்த்துவிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஏ.ஆர்.ரகுமானை மதரீதியாகச் சுருக்குவதும், தாக்குவதுமான செயல்பாடுகள் அற்பத்தனமான இழிச்செயலாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |