பிரித்தானியாவில் ரயில்வே ஓட்டுனர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு! கொந்தளித்த கால்பந்து ரசிகர்கள்
பிரித்தானியாவில் ஃபா கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அன்று, ரயில்வே ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
வேலைநிறுத்த அறிவிப்பு
மே 12 மற்றும் 31ஆம் திகதிகளிலும், சூன் 3ஆம் திகதியும் ரயில்வே ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்வார்கள் என தொழிற்சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
நீண்டகாலமாக ஊதிய உயர்வை ஊழியர்கள் கோரி வருவதாக தொழிற்சங்கம் கூறியுள்ளதுடன், தங்கள் முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
எனவே தான் இந்த மூன்று நாட்கள் போராட்டத்தை அறிவித்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல் சராசரி ஓட்டுனரின் 60,000 பவுண்டுகள் ஊதியம் போதாது எனவும் Aslef அமைப்பு கூறியுள்ளது.
கோபமடைந்த கால்பந்து ரசிகர்கள்
இந்த நிலையில், ரயில்வே ஓட்டுனர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான ஃபா கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி சூன் 3ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதுகின்றன.
Image: Getty Images
இந்த நாளில் வேலைநிறுத்தம் நடைபெற்றால் ரசிகர்களுக்கு போக்குவரத்து பாதிப்பு பெருமளவில் ஏற்படும். எனவே, கால்பந்து ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர் ஒருவர், 'ஃபா கோப்பை இறுதிப்போட்டியின் நாளில் ரயில் வேலைநிறுத்தம் என்பது, பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் இரு அணி ரசிகர்களுக்கும் கெட்ட கனவாகும்' என கூறியுள்ளார்.
கால்பந்து மட்டுமன்றி Epsom Derby குதிரைப் பந்தயமும் சூன் 3ஆம் திகதி நடைபெற உள்ளதால், இதன் ரசிகர்களும் சிக்கலை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.