வானவில் டயட் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு விதமான டயட்களை மக்கள் பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ளது வானவில் டயட் (ரெயின்போ டயட்). இதன் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது.
வானவில் டயட் என்பது நாம், பல்வேறு வண்ணங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதுதான். அதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேரட், கீரை, ஸ்ட்ரோபெர்ரி என்பன நமது உடலை வலுவடையச் செய்கின்றது.
சரி இனி வானவில் டயட்டை எவ்வாறு பின்பற்றலாம் எனப் பார்ப்போம்...
மஞ்சள் - இந்த நிறத்திலான உணவுகள், புற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கவும் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது. உதாரணத்துக்கு, எலுமிச்சை, பைனாப்பிள், வாழைப்பழம், மஞ்சள் நிற குடைமிளகாய்.
சிவப்பு - சிறுநீரகம் மற்றும் இதயத்துக்கு சிவப்பு நிற உணவுகள் சிறந்தது. உதாரணத்துக்கு, தர்பூசணி, தக்காளி, சிவப்பு மிளகாய், ஸ்ட்ரோபெர்ரி.
வெள்ளை - கொலஸ்ட்ரோல் அளவை கட்டுக்குள் வைக்கவும், எலும்பு மற்றும் பற்களின் நலனுக்கும் வெள்ளை நிற உணவுகள் சிறந்தது. உதாரணத்துக்கு, காளான், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, காலிஃப்ளவர்.
ஆரஞ்ச் - உடலில் ஏற்படும் காயங்களை, வீக்கம் என்பவற்றை குணப்படுத்தவும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் ஆரஞ்ச் நிற உணவுகள் பயன்படுகின்றன. உதாரணத்துக்கு, ஆரஞ்ச் பழம், கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாதுமை பழம்.
நீலம் மற்றும் ஊதா - இதய நோய் வராமல் தடுக்கவும் ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் இந்த நிற உணவுகள் உதவுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நிற உணவுகளில் அதிகளவான ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன.
பச்சை - கர்ப்பிணிகளுக்கு இந்த பச்சை நிற உணவுகள் மிகவும் நன்மையளிக்கும். இதை உணவில் சேர்க்கும்பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாக இருப்பது மட்டுமில்லாமல் மகப்பேற்றின்போது நரம்புத்தண்டு பாதிக்காமலும் தடுக்கிறது. உதாரணத்துக்கு, கிவி, கீரை, ப்ரோக்கோலி.
இந்த வானவில் டயட்டினால் என்னென்ன நன்மைகள் உள்ளன?
- உடல் நன்றாக இயங்குவதற்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமானது. வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
- இதில் ஆன்டிஆக்சிடெண்டுகள் இருப்பதால் சருமம் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
- பல வண்ணத்திலான காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகமான நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன.
- வண்ணமயமான காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்துகிறது.
- பல வண்ண காய்கறிகளை உணவில் சேர்க்கும்பொழுது நமக்கு வீணாக பசி எடுப்பதில்லை.