நினைத்த போதெலாம் Paracetamol மாத்திரையை எடுத்துக்கொள்வது மாரடைப்புக்கு வழிவகுக்கும்: ஒரு எச்சரிக்கை செய்தி
தினமும் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மாரடைப்பு அல்லது பக்கவாதத்துக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் பிரித்தானிய ஆய்வாளர்கள்.
சிலர் லேசாக தலைவலி வந்தாலே பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள்.
சமீப காலமாக, மாதவிடாயின்போது ஏற்படும் வலிக்காக பாராசிட்டமால் மாத்திரைகளை பெண்கள் எடுத்துக்கொள்ளும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
இபு புரூபன் போன்ற வலி நிவாரணிகள், உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியவை என கருதப்பட்டதால், அதற்கு பாராசிட்டமால் ஒரு நல்ல மாற்று என மருத்துவர்களே கருதிவந்தார்கள்.
ஆனால், இப்போது, பாராசிட்டமால் மாத்திரையும் அதே மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என எடின்பர்க் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
முதன்முறையாக, சோதனை முயற்சியாக நான்கு நாட்களுக்கு மட்டும் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவுக்கு இரத்த அழுத்தத்தை அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நான்கு நாள் ஆய்விலிருந்து, கணக்கிட்டுப் பார்க்கும்போது, நாளொன்றிற்கு 4 கிராம் அல்லது எட்டு பாராசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதை 20 சதவிகிதம் அளவுக்கு அதிகரிப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
ஆனாலும், எப்போதாவது தலைவலி அல்லது காய்ச்சலுக்காக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதே என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
110 பேர் கலந்துகொண்ட இந்த ஆய்வில், ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு என்ன நடக்கிறது என்று மட்டுமே ஆய்வாளர்கள் கவனித்துள்ளார்கள்.
ஆகவே, நோயாளிகளுக்கு, குறிப்பாக இதயப் பிரச்சினை அபாயம் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்கள் பாராசிப்பமால் மாத்திரைகளை பரிந்துரைப்பதை மருத்துவர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.