ஆல்ரவுண்டராக செதுக்கிய தந்தை! இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங்... யார் அவர்?
இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர் ராஜ் அங்கத் பாவா.
சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா வென்றது, இந்த சரித்திரத்தை இந்திய அணி படைக்க முக்கிய காரணமாக பாவா இருந்துள்ளார்.
ஒரு பக்கம் ரன்களை குவித்தபடியும், மற்றொரு பக்கம் விக்கெட்களை வீழ்த்தியபடியும் தான் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். வேகப்பந்துவீச்சு முதல் பேட்டிங் வரை ராஜ் பாவாவின் சிறந்த செயல்திறனுக்கு பின்னால் தூணாக இருப்பது அவர் தந்தை சுக்விந்தர் தான்.
2000-ல் நடந்த யு19 உலகக் கோப்பை தொடரில் முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதில் முக்கிய வீரராக இருந்தவர் யுவராஜ் சிங்.
அவருக்கு பயிற்சியாளராக இருந்ததற்காக அன்று சுக்விந்தர் கொண்டாடப்பட்டார். தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் பாவா கிரிக்கெட்டை தான் வாழ்க்கையாக தேர்வு செய்யவில்லை.
ஒருநாள் யுவராஜ் சிங்கிற்கு சுக்விந்தர் பயிற்சி கொடுத்ததை அவர் மகன் பாவா நேரில் பார்த்துள்ளார். யுவராஜின் பேட்டிங் ராஜ்ஜை கவர, அவரை இமிடேட் செய்ய நினைத்து அதேபோல பேட்டிங் செய்வதை தொடங்கியுள்ளார்.
இப்படி தான் அவரை கிரிக்கெட் ஆட்கொண்டது. யுவராஜ் சிங்கின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், இயல்பாகவே வலதுகை பழக்கம் கொண்ட ராஜ், யுவராஜை போல ஆட வேண்டும் என்பதற்காக இடதுகை பேட்ஸ்மானாக தன்னை பழக்கப்படுத்தி கொண்டுள்ளார்.
ஆனால் இதை அவர் தந்தை மாற்ற நினைத்தும் முடியவில்லை, பின்னர் நிரந்தரமாக இடது கை பேட்ஸ்மேன் ஆனார்.
ஆரம்பத்தில் சுழற்பந்துவீசி கொண்டிருந்த ராஜை வேகப்பந்துவீச்சு பக்கம் திருப்பியது சுக்விந்தரே. வேகப் பந்துவீச்சு அவரது டிஎன்ஏவில் உள்ளது என்பதால் அவனை அதற்கு பழக்கப்படுத்தினேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இன்று தான் நினைத்தது போலவே தனது மகனை ஒரு சிறப்பாக ஆல் ரவுண்டராக செதுக்கியுள்ளார் சுக்விந்தர்.