தாலிபான் பெயரில் கிரிக்கெட் அணி! பலத்த சர்ச்சையை கிளப்பிய கிரிக்கெட் போட்டி
இந்தியாவின் ராஜஸ்தானில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தாலிபான் பெயரில் ஒரு கிரிக்கெட் அணியின் பெயர் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் பிரபலமான போக்ரான் இடத்திலிருந்து 36 கி.மீட்டர் தொலைவில் உள்ள பனியான என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அங்கு கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகின்றனர். இந்த கிரிக்கெட் போட்டி தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போக்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுபான்மை சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட ஒரு அணியின் பெயர் தாலிபான்.
தீவிரவாத அமைப்பான தாலிபான் பெயரை ஒரு கிரிக்கெட் அணிக்கு வைத்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து தாலிபான் என்ற பெயர் கொண்ட கிரிக்கெட் அணியை போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் நீக்கிவிட்டனர்.
இது தொடர்பாக அந்த கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்த குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், முதல் போட்டிக்கு பிறகு அந்த அணி நீக்கப்பட்டு அதற்கு முழு தடை விதிக்கப்பட்டது. அமைப்பாளர்கள் மற்றும் கிராமவாசிகள் சார்பாக மன்னிப்பு கோருகிறேன் என கூறியுள்ளார்.