வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் அதகளம்... அடிவாங்கிய சென்னை அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 62 ஆவது லீக் ஆட்டம் டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
ஆயுஸ் மாத்ரே 43 ஓட்டங்கள்
இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தார். சென்னை அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கான்வே 10 ஓட்டங்களிலும், உர்வில் பட்டேல் டக் அவுட் முறையிலும் வெளியேறினார்கள்.
எனினும் சென்னை அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே, அஸ்வின் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். இதில் அஸ்வின் 8 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுக்க, சிறப்பாக விளையாடிய ஆயுஸ் மாத்ரே 20 பந்துகளில் 43 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதன் காரணமாக சென்னை அணி பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்கள் எடுத்து. ஜடேஜா ஐந்து பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே சேர்த்தார். நடுவரிசையில் விளையாடிய டிவால்ட் பிரவீஸ் வழக்கம் போல் தன்னுடைய அதிரடியை காட்டினார்.
மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரி என பறக்க விட ராஜஸ்தான் அணி தடுமாறியது. எனினும் பிரவீஸ் முக்கிய கட்டத்தில் 25 பந்துகளில் 42 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
சிவம்துபே, தோனி ஆகியோர் விக்கெட்டுகளை தக்கவைக்க தற்காப்பு ஆட்டத்தில் விளையாடினர். 32 பந்துகளை எதிர் கொண்ட சிவம் துபே 39 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க தோனி 17 பந்துகளில் 16 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசி ஐந்து ஓவரில் சென்னை அணி வெறும் 41 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆகாஷ் மத்வால் மற்றும் யுத்வீர் சிங் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சூர்யவன்ஷி 57 ஓட்டங்கள்
188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய ஜெய்ஸ்வால் அதிரடி காட்டினார். 19 பந்துகளில் ஜெய்ஸ்வால் ஐந்து பவுண்டரி, 2 சிக்சர் என 36 ஓட்டங்களை சேர்த்தார்.
ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தவுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு வைபவ் சூரியவன்ஷியுடன் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சாம்சன் பொறுப்பாக விளையாட வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர் என 33 பந்துகளில் 57 ஓட்டங்கள் சேர்த்தார்.
சஞ்சு சாம்சன் 41 ஓட்டங்களில் வெளியேற, இறுதியில் துருவ் ஜுரல் 12 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். சிம்ரன் ஹிட்மயர் 5 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுக்க ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எட்டியது.
சென்னை தரப்பில் அஸ்வின் 41 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களையும் நூர் அகமத், அன்சூல் காம்போஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தனர். இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பத்தாவது இடத்துடன் நிறைவு செய்யப்போகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |