மிரட்டிய ஜோஸ் பட்லர்... கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான்
சிக்சர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட ஜோஸ் பட்லரின் சதம் காரணமாக ராஜஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
நரேன் 49 பந்துகளில் சதம்
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் களம் இறங்கினர். இதில் சால்ட் 10 ஓட்டங்களிலும் அடுத்து வந்த ரகுவன்ஷி 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேன் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து நரேனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். 10 ஓட்டங்களில் அவர் வெளியேற, தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரேன் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
ரசல் 13 ஓட்டங்களிலும், நரேன் 109 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 19 ஓட்டங்களிலும், அடுத்து வந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லருடன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார்.
பட்லர் 60 பந்துகளில் 107 ஓட்டங்கள்
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் பட்லர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் துருவ் ஜுரேல் (2), அஷ்வின் (8), ஹெட்மயர் (0) என விக்கெட்டுகள் சரிந்தன.
ரோவ்மேன் பவல் களமிறங்கி அதிரடி காட்ட, சுனில் நரேன் ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை விளாசிய அவர், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், பட்லர் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
18வது ஓவரில் 18 ஓட்டங்களை குவித்த அவர், 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 19 ஓட்டங்களை எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ஓட்டங்களே தேவைப்பட்டது.
முதல் பந்தை பட்லர் சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த 3 பந்துகளில் ரன் ஏதும் வரவில்லை 5வது பந்தில் 2 ஓட்டங்களும், கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பட்லர் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 107 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |