இளையராஜாவுக்கு எம்பி பதவி! நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூறிய வாழ்த்து
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமனம் செய்யப்பட்டதற்கு, நடிகர்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார்.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஒன்றிய அரசு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், இசைத்துறையில் பெரும் சாதனைகள் புரிந்ததை கவுரவிக்கும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இளையராஜா வெளியிட்ட பதிவில், நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மரியாதை. இசையின் அழகையும், கலை மற்றும் கலாச்சாரம், நமது சமூகத்தை அகலமாக விரிவடைய செய்வதற்கும் எனக்கு கிடைத்த வாய்ப்பு என தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவரது பதிவில், 'மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் இளையராஜா' என தெரிவித்துள்ளார்.
அதே போல் நடிகர் கமல்ஹாசன், 'ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.