மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்! நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்
மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
திடீர் மரணம்
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது 57வது வயதில் நேற்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மயில்சாமியின் உடல் தகனம் நடக்க உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் ஆறுதல்
அந்த வகையில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 'மயில்சாமியை 24 வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மிமிக்கிரி கலைஞராக அவரை எனக்கு தெரியும். அவர் எப்போதும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவபெருமான் குறித்து மட்டும் தான் பேசுவார், சினிமா குறித்து பேச மாட்டார்.
நாங்கள் நீண்டகால நண்பர்களாக இருந்தும் கூட நிறைய படங்களில் இணைந்து நடிக்கவில்லை. கடைசி முறை என்னை கார்த்திகை தீபத்திற்கு தொடர்பு கொண்டார். நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை. அடுத்த முறை என்னை மன்னித்துவிடுங்கள், என்னால் பேச முடியவில்லை கூற நினைத்து மறந்துவிட்டேன். இப்போது அவரே மறைந்துவிட்டார்.
திரைத்துறையில் இரண்டு நகைச்சுவை நடிகர்கள் உயிரிழந்திருப்பது பேரிழப்பு. ஒன்று விவேக், மற்றோன்று மயில்சாமி. அவர்களுடைய இழப்பு திரைத்துறை, நண்பர்கள் மட்டுமல்லாமல் சமூகத்திற்கே பேரிழப்பு. இருவருமே நல்ல சிந்தனைவாதிகள்.
மயில்சாமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. நேற்று நடந்த சிவன் கோவில் நிகழ்ச்சியில் ரஜினி பாலபிஷேகம் செய்வதை நான் பார்க்க வேண்டும் என்று அவர், டிரம்ஸ் சிவமணியிடம் கூறியிருக்கிறார். கட்டாயம் சிவமணியிடம் இதைப்பற்றி பேசிவிட்டு மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்' என தெரிவித்தார்.