திமுகவின் மிரட்டலால் அரசியலில் இருந்து விலகல்? ஆதவ் கருத்துக்கு ரஜினிகாந்த் பதிலடி
திமுகவின் மிரட்டலால் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதாக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
ரஜினிகாந்த் குறித்த ஆதவ் பேச்சு
கடந்த 2017 ஆம் ஆண்டில் தமிழக அரசியலில் களம் காண உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அதன் பின்னர் உடல்நிலை காரணமாக தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.

சமீபத்தில் தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக கொடுத்த மிரட்டலால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை. நமது தலைவர் விஜய் அந்த மிரட்டலுக்கு அடிபணியவில்லை என்று பேசியிருந்தார்.

அவரின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், திரைத்துறையினர் மற்றும் ஊடகவியலாளர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
தவெகவிற்கு எதிராக இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதாக நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அறிவித்தனர்.
ஆதவ் அர்ஜுனாவின் இத்தகைய பேச்சு குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
ரஜினிகாந்த் விளக்கம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெசு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திருஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி. திரு தொல் திருமாவளவன்,
— Rajinikanth (@rajinikanth) March 17, 2026
திரு. எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு அண்ணாமலை, திருஅர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன்,, திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திருநக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர்.
என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |