ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை; இது வெறும் டிரெய்லர் - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை, நடந்தவை வெறும் டிரெய்லர்தான் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த மே 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தமானது மே 18 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காஷ்மீர் சென்று அங்கிருந்த இந்திய ராணுவத்தினர் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிலையில், இன்று குஜராத்தில் உள்ள பூஜ் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை வீரர்களிடம் உரையாற்றினார்.
ராஜ்நாத் சிங்
இதில் பேசிய அவர், "ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் செய்த அனைத்தும், இந்தியாவில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. நன்றியுள்ள தேசத்தின் சார்பாக, உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் மண்ணில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்களை நீங்கள் எவ்வாறு அழித்தீர்கள் என்பதை முழு உலகமும் பார்த்திருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய விமானப்படை தங்கள் வலிமையை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் போர்க் கொள்கை மற்றும் தொழில்நுட்பம் மாறிவிட்டது என உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
IMF கொடுத்த ஒரு பெரும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது.மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இதுவரை நடந்தது வெறும் டிரெய்லர்தான். சரியான நேரம் வரும்போது, முழு படத்தையும் உலகிற்குக் காண்பிப்போம்.
பாகிஸ்தான் இப்போது சோதனைக் காலத்தில் இருக்கிறது. அதன் நடத்தை மேம்பட்டால், சரி, இல்லையெனில், அதற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |