ரியான் பராக், குல்தீப் சென் அசத்தல்: பெங்களூருவை துவம்சம் செய்த ராஜஸ்தான்
இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர் படிக்கல் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் நோக்கி நடையை கட்ட, நடப்பு ஐபிஎல் தொடரில் 3 சதங்கள் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை வைத்துள்ள பட்லர் இந்த போட்டியில் 8 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அவரை தொடர்ந்து ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் சரிவை நோக்கி சென்றது. சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இருப்பினும் ஒருபக்கத்தில் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 56 ஓட்டங்கள் சேர்த்து அரைசதம் கடந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து 145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய கோஹ்லி 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து ரஜத் படித்தார் களமிறங்கி 16 பந்துகளில் 16 ஓட்டங்கள் சேர்த்து அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்.
குல்தீப் சென் வீசிய 7-வது ஓவரில் டு பிளேசிஸ் 23 ஓட்டங்களில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் முதல் பந்திலே அதே ஓவரில் வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஒற்றை இலக்கங்களில் பெவிலியன் திரும்ப, பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பு வெகுவாக குறைந்தது.
பின்வரிசையில் வந்த ஹசராங்கா 13 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 19.3 ஓவர்கள் முடிவில் 115 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது இதனால் ராஜஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.