நாவூறும் சுவையில் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி.., வீட்டிலேயே செய்யலாம்
ரமலான் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் மாலை நேரத்தில் நோன்பு திறக்கும் போது நோன்பு கஞ்சி குடிப்பது வழக்கம்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் மத பாகுபாடின்றி அனைவருக்கும் இந்த நோன்பு கஞ்சி வழங்குவார்கள்.
அந்தவகையில் இந்த நோன்பு கஞ்சிய அதே சுவையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி- 150g
- மட்டன் கறி- 100g
- பாசி பருப்பு- 25g
- சின்ன வெங்காயம்- 6
- பெரிய வெங்காயம்- 1
- பூண்டு- 5
- தக்காளி- 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் பால்- 1 கப்
- பட்டை- சிறிய துண்டு
- கிராம்பு- 4
- ஏலக்காய்- 4
- பிரியாணி இலை- 1
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 3
- கொத்தமல்லி
- புதினா
- உப்பு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி சூடுபடுத்தி அதன் பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, வெந்தயம் சேருங்கள்.
இதன் பிறகு சின்ன வெங்காயம், பூண்டு இடித்து சேர்த்து பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும்.
அடுத்ததாக பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி சேர்த்து கை நிறைய கொத்தமல்லி, புதினா போட்டு கலக்கவும்.
தக்காளியின் பச்சை வாசனை போன பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மட்டன் கொத்துக்கறியை கழுவி உப்பு சேர்த்து மட்டனை வேக விடுங்கள்.
முன்னதாக சீரக சம்பா அரிசி, பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு ஊறவைத்துவிடுங்கள்.
இப்போது அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து ஆறு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு குக்கரை மூடி 5 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
அரிசி, மட்டன் நன்கு வெந்த பிறகு கரண்டி வைத்து மசித்துவிட்டு தேங்காய் பால் ஊற்றி கிளறினால் ரமலான் நோன்பு கஞ்சி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
.