பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்னை வந்த 12 வயது சிறுவன்.. பத்திரமாக மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாயமான 12 வயது பள்ளி மாணவன் சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டான்.
சென்னை வந்த சிறுவன்
ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது 12 வயது மகன் சஞ்சய், அங்குள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் பள்ளி மற்றும் டியூஷன் முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட சஞ்சய், வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் சஞ்சய் வீட்டுக்கு வராததால், பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், சஞ்சய் வீட்டில் இருந்து ரூ.1,000 எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்றது தெரியவந்தது.
பத்திரமாக மீட்பு
சென்னையில் உள்ள உறவினர்களை தேடிச் சென்ற சஞ்சய்க்கு சரியான முகவரி தெரியவில்லை என்பதால் புளியந்தோப்பு பகுதியில் வழி தெரியாமல் தனியாக நின்றுள்ளான்.
அப்போது ஆட்டோ டிரைவர் பிரகாஷ், சிறுவனை பார்த்து விசாரித்துள்ளார். அவரது செல்போன் மூலம் சஞ்சய் தனது தந்தையை தொடர்பு கொண்டு, சென்னையில் இருப்பதாக தெரிவித்தான்.
இதையடுத்து, சிறுவனை போலீசாரிடம் ஒப்படைக்குமாறு தந்தை கேட்டுக்கொண்டார். அதன்படி, ஆட்டோ டிரைவர் பிரகாஷ் சிறுவனை புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் பத்திரமாக ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சஞ்சய் சென்னைக்கு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கும், சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுவனை சிங்காரப்பேட்டைக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |