அடங்காத பிரித்தானியாவை இணங்கவைக்க நடவடிக்கை எடுப்போம்: மிரட்டும் பிரான்ஸ்
பிரித்தானியா விதிகளுக்கு அடங்காது, அதை இணங்க வைக்க அரசியல், சட்டம் என அனைத்து மட்டத்திலும் நடவடிக்கைகள் எடுப்போம் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் டிசம்பர் 24 அன்று செய்யப்பட்ட வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட எந்த விடயத்தையும் பிரித்தானியா மதிக்கவில்லை என்று கூறியுள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Yves Le Drian, ஜெர்சி தீவு பகுதியில் மீன் பிடிக்க புதிதாக பிரித்தானியா விதித்துள்ள விதிமுறைகள் அந்த ஒப்பந்தத்தில் இல்லை என்றும், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளதோடு, எங்கள் மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறியுள்ளார்.
அதற்காக, அரசியல் சட்டம் என அனைத்து மட்டத்திலும் நடவடிக்கைகள் எடுப்போம் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய ஏற்பாடுகளின்படி, ஆங்கிலக்கால்வாயில் மீன் பிடிக்க தங்களை அனுமதிப்பதில்லை என வட பிரான்ஸ் முழுவதிலுமுள்ள மீனவர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
போன மாதம், தங்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதை
எதிர்த்து, ஏராளம் பிரெஞ்சு மீனவர்கள் ஜெர்சி துறைமுகத்தை முற்றுகையிட
முயன்றதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது
நினைவிருக்கலாம்.