கோபம் கொப்புளிக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பு குவிந்த பொலிசார்... பேரணியின் பின்னணி
கோபமும் கொந்தளிப்புமாக பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பு இன்று கூடினார்கள் பிரான்ஸ் பொலிசார். சேவை செய்வதற்காகத்தான் ஊதியம் வாங்குகிறோம் சாவதற்காக அல்ல, என்ற பதாகைகளுடன் அவர்கள் பிரம்மாண்ட பேரணி ஒன்றில் இறங்கியுள்ளார்கள். பேரணியில், பொலிசார் மட்டுமின்றி பொதுமக்களுமாக சுமார் 35,000 பேர் கலந்துகொண்டுள்ளார்கள்.
கடந்த சில வாரங்களில் மட்டும், பிரான்சில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டார்கள், ஒருவர் தீவிரவாத தாக்குதல் ஒன்றின்போது, மற்றொருவர் முரட்டு 19 வயது இளைஞர் ஒருவரால் கொல்லப்பட்டார்.
போராட்டங்களைத் தடுக்கச் செல்லும்பொதெல்லாம், தங்கள் மீது கற்களும் பட்டாசுகளும் வீசப்படுவதால் பொலிசார் கோபமடைந்துள்ளார்கள். மக்களை பாதுகாக்கும் தங்களைப் பாதுகாக்க, சட்டம் ஒன்று வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள் பேரணியில் ஈடுபட்ட பொலிசார்.
பொலிசாரை தாக்குபவர்களை சிறையில் அடைக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும், பொலிசாரைக் கொல்பவர்களுக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளார்கள்.