வேகமாகப் பரவும் காலரா தொற்று: பரபரப்பாகும் பிரெஞ்சுத்தீவு
பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட் (Mayotte), என்னும் தீவில், காலரா தொற்று வேகமாக பரவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பாகும் பிரெஞ்சுத்தீவு
பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட் (Mayotte) தீவில் காலரா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 48 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவில் காலரா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டாவது சிறப்பு சிகிச்சைப்பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தகவலின்படி 26 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்ளூர் மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
காலரா என்பது என்ன?
காலரா என்பது, முறையாக, சரியான நேரத்துக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பயங்கர தொற்று நோயாகும். விப்ரியோ காலரா என்னும் கிருமியால் உருவாகும் இந்த நோய், சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவின் மூலம் பரவக்கூடும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுவதால், உடலிலுள்ள சத்துக்கள் வேகமாக வெளியேறி, மரணம் வரை ஏற்படக்கூடும்.
உடனடி ஆன்டிபயாட்டிக் சிகிச்சை, உடலிலிருந்து வெளியேறும் சத்துக்களை ஈடு செய்யும் வகையில் ஊசி முலம் சத்துக்களை ஏற்றுதல் முதலான சிகிச்சைகளுடன், பிரச்சினை கண்டறியப்பட்டவுடன்தானே குறைந்தபட்சம் சர்க்கரை, உப்புக்கரைசல் என்னும் oral rehydration solution (ORS)ஐ பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கொடுக்கத் துவங்குவதே பெருமளவில் நல்ல பலன் கொடுக்கும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
காலரா தொற்றால் ஆண்டுக்கு 21,000 முதல் 143,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |